×

படுகை அணைகளில் குளிக்க பொதுமக்களுக்கு தடை ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கும் போலீசார்

புதுச்சேரி, டிச. 11: காவல் துறை உத்தரவை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ள படுகை அணைகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அணைகளில் குளிப்பதற்காக வரும் பொதுமக்களை போலீசார் தடுத்து, திருப்பி அனுப்பி வருகின்றனர். நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்தது. சுமார் ஒரு வாரத்திற்கு மேல் பெய்த தொடர் மழையால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியுள்ளன. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடுர் அணையும் நிரம்பியுள்ளதால், அங்கிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சங்கராபரணி ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது. புதுச்சேரி பகுதிகளில் உள்ள கூனிச்சம்பட்டு, கைக்கிளப்பட்டு, சுத்துக்கேணி, செல்லிப்பட்டு, செட்டிப்பட்டு பகுதிகளில் சங்கராபரணி ஆற்றில் கட்டப்பட்டுள்ள படுகை அணைகள் நிரம்பி வழிகின்றன. அணைகள் நிரம்பி தண்ணீர் மறுபுறம் வழிந்தோடுவதை பார்க்க தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். அதன்படி அணைகளுக்கு வருபவர்கள், நீரில் இறங்கி செல்பி எடுத்தும், குளித்தும் மகிழ்கிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் வில்லியனூர் அருகே வாய்க்காலில் குளித்த சிறுவன் சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்தான். இதேபோன்ற சம்பவம் படுகை அணைகளிலும் நடந்து விடக்கூடாது என்பதால், அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகள், காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தியதின் பேரில் அனைத்து படுகை அணைகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டு, அணைக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை குளிக்க கூடாது என அறிவுறுத்தி திருப்பி அனுப்பி வருகிறார்கள். வெகு தொலைவில் இருந்து படுகை அணைகளுக்கு குளிக்கும் நோக்கில் வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இதனால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.


Tags : public ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...