×

விருத்தாசலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை கணக்கில் வராத ₹2.66 லட்சம் பறிமுதல் இடைத்தரகர்கள் பீதி


விருத்தாசலம், டிச. 11:     விருத்தாசலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ. 2.66 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.  கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தினுள் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பட்டா மாற்றம், பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கு பத்திரப் பதிவு செய்வதில் இடைத்தரகர்கள் மூலம் பணம் பரிமாற்றம், லஞ்சம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் அளித்த ரகசிய தகவலின் படி, கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மெல்வின் ராஜாசிங் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், சண்முகம், மாலா உள்ளிட்ட 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 5 மணிக்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

 அலுவலகத்திற்குள் நுழைந்ததும் கதவுகளை மூடிவிட்டு சார் பதிவாளர் கணேசன் மற்றும் பணியில் இருந்த ஊழியர்கள், பதிவு எழுத்தர்கள், பத்திர பதிவுக்காக வந்திருந்த பொதுமக்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர். 5 மணிக்கு தொடங்கி இரவு 8.30 வரை நடந்த விசாரணையில், சார் பதிவாளர் கணேசனிடம் இருந்த கணக்கில் வராத ரூ. 2 லட்சத்து 66 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த பணம் எவ்வாறு வந்தது. யார் மூலம் வந்தது என்பது குறித்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து விட்டு சென்றனர்.  விருத்தாசலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த திடீர் சோதனை விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சார் பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரகர்களாக செயல்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சமாக பெற்றுத்தந்த இடைத்தரகர்கள்  பலர் பீதியடைந்துள்ளனர்.

Tags : police raid ,registrar ,Vriddhachalam ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே...