சென்னை: சென்னை கண்ணகி நகரில் மழைநீரில் அறுந்து கிடந்த கம்பியை மிதித்ததில் பெண் தூய்மைப்பணியாளர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தை கண்டித்து தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் ரவி (36). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மனைவி வரலட்சுமி (30).
இவர்களுக்கு 7ம் வகுப்பு படிக்கும் யுவஸ்ரீ (12) என்ற மகளும், 3ம் வகுப்பு படிக்கும் மோனீஷ் (9) என்ற மகனும் உள்ளனர். வரலட்சுமி, 196வது வார்டில் தூய்மைப்பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல 11வது குறுக்கு தெரு வழியாக நடந்து வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில், நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்ததால் சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது.
அந்த மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இதனால் மழைநீர் முழுவதிலும் மின்சாரம் கசிந்துள்ளது. இந்த மழைநீரை வரலட்சுமி கடந்து சென்றபோது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே, இதுகுறித்து மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
தகவலறிந்து 50க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து, மின்வாரியத்தின் அலட்சியத்தால்தான் பெண் தூய்மைப்பணியாளர் உயிரிழந்து விட்டார். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்தது கண்ணகிநகர் இன்ஸ்பெக்டர் நட்ராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர், உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததால் தூய்மைப்பணியாளர்கள் கலைந்து சென்றனர். பின்னர் வரலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இப்பகுதியில் அனைத்து மின் வயர்களும் மிக தாழ்வாக செல்கின்றன. மின்பெட்டியில் இருந்து செல்லும் வயர்கள் பழுதடைந்துள்ளன. இவற்றை சீரமைக்கும் நடவடிக்கையில் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
இதனால் தற்போது ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் ஈஞ்சம்பாக்கத்தில் மழைநீரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கொத்தனார் மின்சாரம் பாய்ந்து இறந்த நிலையில், தற்போது கண்ணகி நகரில் தூய்மைப் பணியாளர் மின்சாரம் பாய்ந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
* ரூ.20 லட்சம் நிதி உதவி கணவருக்கு வேலை
உயிரிழந்த தூய்மைப்பணியாளர் வரலட்சுமி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவியை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வரலட்சுமியின் கணவர் ரவியிடம் நேற்று வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது: இப்பகுதியில் தாழ்வாக மற்றும் ஆபத்தான முறையில் உள்ள மின் கம்பிகள் விரைவில் சீரமைக்கப்படும். உயிரிழந்த வரலட்சுமி குடும்பத்திற்கு மாநகராட்சி ஒப்பந்ததாரர் தரப்பில் ரூ.10 லட்சம், மின்வாரியம் சார்பில் ரூ.10 லட்சம் என ரூ.20 லட்சம் வழங்கியுள்ளோம்.
மேலும் வரலட்சுமியின் மகன், மகள் இருவரின் கல்வி செலவை திமுக ஏற்கும். இறுதி சடங்கின் ஒட்டுமொத்த செலவையும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் ஏற்றுக்கொள்வார். வரலட்சுமியின் கணவர் ரவிக்கு, தூய்மைப்பணி மேற்கொள்ளும் நிறுவனத்தில் சூபர்வைசர் வேலை தர உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
