×

ஆன்லைன் விற்பனையால் ரூ.100 கோடி இழப்பு தீபாவளிக்கு பட்டாசு விலை ராக்கெட் வேகத்தில் உயரும்: சிவகாசியில் வணிகர் கூட்டமைப்பினர் தகவல்

சிவகாசி: ஆன்லைன் மூலம் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதால், சிவகாசியில் ரூ.100 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் சிறப்பு செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜா சந்திரசேகரன் தலைமை வகித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பட்டாசு வணிகர்கள் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் மாநில தலைவர் ராஜா சந்திரசேகரன் அளித்த பேட்டி: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தமிழகம் முழுவதும் தற்காலிக மற்றும் நிரந்தர பட்டாசு கடைகளுக்கு தமிழக அரசு விரைவில் உரிமம் வழங்கிட வேண்டும். ஆன்லைன் பட்டாசு வணிகத்தை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது. இந்த வர்த்தகம் உரிய அனுமதி இல்லாமலும், ஜிஎஸ்டி வரி கட்டாமலும் முறைகேடாக நடைபெறுகிறது. ஆன்லைனில் பட்டாசு வர்த்தகம் மேற்கொண்டு மோசடியில் ஈடுபடும் இணையதளங்களை சைபர் கிரைம் போலீசார் மூலம் முடக்க வேண்டும்.

ஆன்லைன் பட்டாசு வணிகம் மூலம் சிவகாசி பட்டாசு ஆலைகளுக்கு ரூ.100 கோடி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது போல் ஆன்லைன் பட்டாசு வர்த்தகத்திற்கும் அரசு தடை விதிக்க வேண்டும். நடப்பு ஆண்டில் தொடர் வெடிவிபத்து காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கைகளால் 30 சதவீத பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டு பட்டாசுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தீபாவளிக்கு பட்டாசு விலை ராக்கெட் வேகத்தில் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினார்.

* நிர்வாகிகள் – வியாபாரிகள் திடீர் மோதல்
கூட்டத்தில் ஆன்லைன் பட்டாசு வணிகம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் வியாபாரிகள் தங்கள் கருத்துகளை காரசாரமாக பகிர்ந்து கொண்டனர். ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு சில வியாபாரிகள் ஆதரவு தெரிவித்து பேசியதால் நிர்வாகிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது. மூத்த நிர்வாகிகள் தலையிட்டு அனைவரையும் சமாதானப்படுத்தினர்.

Tags : Diwali ,Traders' Association ,Sivakasi ,Sivakasi: Traders' Association ,Tamil Nadu Cracker Traders' Association ,Sivakasi, Virudhunagar district ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் ஆஜர்..!!