காஞ்சிபுரம்: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்றிரவு விடிய விடிய பரவலாக மழை பெய்தது. இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விவசாய பணிகளும் ஜரூராக நடந்து வருகிறது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக்கி உள்ளதால், மழை பெய்யும் என வானிலை ஆய்வு அறிவித்துள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், ஸ்ரீ பெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் காஞ்சிபுரம் மாதா கோயில் தெரு, தாமல்வார்தெரு, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு, ரங்கசாமி குளம், இரட்டை மண்டபம், பெரியார் நகர், விளக்கடி பெருமாள் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதுபோல் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஆவாகுட்டை தெரு, லிங்கப்பன் தெரு, முருகன் காலனி, பல்லவர்மேடு போன்ற இடங்களிலும் மழைநீர் தேங்கிகிடக்கிறது. இதனால் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
இந்த மழையால் நீர்வரத்து கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் 381 ஏரிகள் உள்ளன. இதில், சிறிய ஏரிகளான உள்ளாவூர் மதகுஏரி, காம்மராஜபுரம் ஏரி, பழைய சீவரம் அருக்கேன்டான் ஏரி, கரூர் தண்டலம் ஏரி, கட்டவாக்கம் ஏரி, புத்தேரி, கோவிந்தவாடி சித்தேரி, பெரிய கரும்பூர் மதகு ஏரி, சக்கரவர்த்தி தாங்கல், கூரம் சித்தேரி, தாமல் கோவிந்தவாடி பெரிய ஏரி, தாமல் சக்கரவர்த்தி ஏரி, தாமல் சித்தேரி, கோவிந்தவாடி பெரிய ஏரி, வேளியூர் பெரிய ஏரி, வெளியூர் சித்தேரி ஆகிய 15 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பெரிய ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெப்பச்சலனம் காரணமாக அடிக்கடி மாலை வேளைகளில் மழை பெய்து வருகிறது. காலையில் வெயிலும், மாலையில் மழையும் என இருந்து வந்த நிலையில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து வந்தது. இந்நிலையில் இரவு திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. திருவள்ளூர், திருத்தணி, திருவாலங்காடு, திருமழிசை, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, பூண்டி, தாமரைபாக்கம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் கரை புரண்டோடியது.
திருத்தணி நகரில் காந்திரோடு, பழைய பஜார் தெரு, ஆறுமுகசாமி கோயில் தெரு, போண்டா ராமசாமி தெரு, பைபாஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆறுபோல் மழைநீர் ஓடியது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை பைபாஸ் சாலை, ரயில்வே சுரங்கப்பாதை சாலை, அரக்கோணம் சாலை, வலியம்மாபுரம் பிரதான சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இந்த மழையால் சொர்ணவாரி பட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில்மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக திருத்தணி மற்றும் சோழவரம் பகுதிகளில் 13 செ.மீட்டரும், குறைந்தபட்சமாக பள்ளிப்பட்டில் 3 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது.
மாவட்டத்தில் சராசரியாக 1146 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த மழையால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் செங்கல்பட்டு, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, பல்லாவரம், தாம்பரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செய்யூர், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். கனமழை பெய்ததால் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகளான மதுராந்தகம், செங்கல்பட்டு கொளவாய் ஏரி, பாலூர் கொண்டங்கி, மானாமதி, செய்யூர், அணைக்கட்டு, நந்திவரம், மணி மங்கலம் உள்ளிட்ட ஏரிகளுக்கு கால்வாய்கள் மூலம் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது பெய்த மழையால் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
