×

திருவண்ணாமலையில் நாளை மறுதினம் குபேர கிரிவலம் செல்ல தடை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

திருவண்ணாமலை, டிச.11: திருவண்ணாமலையில் நாளை மறுதினம் நடைபெறும் குபேர கிரவலம் தடை செய்யப்பட்டுள்ள கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் 14 கி.மீ தொலைவுள்ள கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க சன்னதிகள் அமைந்துள்ளன. கிரிவலம் செல்லும் பக்தர்கள் அஷ்ட லிங்க சன்னதிகளையும் தரிசனம் செய்வது வழக்கம்.  இந்நிலையில், அஷ்டலிங்க சன்னதிகளில் 7வது சன்னதியாக குபேர லிங்கம் அமைந்துள்ளது. செல்வச் செழிப்பு பெருக, குபேர லிங்கத்தை வழிபடுவது உகந்தது என்பது பக்தர்களின் நம்பிக்கை. கடந்த சில ஆண்டுகளாக குபேர கிரிவலம் என்பது பிரபலமாகி வருகிறது. கார்த்திகை மாதம் சிவராத்திரியன்று பிரதோஷ காலத்தில் குபேர லிங்கத்தை வழிபட்டு, கிரிவலம் சென்றால், வறுமை நீங்கி வளம் பெருகும் என பக்தர்கள் நம்புகின்றனர். எனவே, ஒவ்வொரு ஆண்டும் குபேர கிரிவலத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்தாண்டு குபேர கிரிவலம் செல்ல உகந்த நாள் வரும் 13ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளதால், குபேர கிரிவலம் செல்ல கலெக்டர் சந்தீப் நந்தூரி தடை விதித்துள்ளார்.

இதுகுறித்து, கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருப்பதாவது: வரும் 13ம் தேதி குபேர லிங்கம் தரிசனம் செய்து, கிரிவலம் செல்வதற்கு உகந்த நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சமூக ஊடகங்களின் பரவி வருகின்றன. தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 31ம் தேதி வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும், நோய் பரவல் முற்றிலும் குறையும் வரை பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். அதற்காக, தமிழக அரசு பல்வேறு தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. எனவே, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள குபேர லிங்கம் தரிசனம் மற்றும் கிரிவலம் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. ஆனால், அண்ணாமலையார் கோயில் சார்பில் குபேர லிங்க சன்னதியில் வரும் 13ம் தேதி வழக்கமான பூஜைகள் நடைபெறும். குபேர லிங்க சன்னதிக்கும், கிரிவலம் செல்வதற்கும் பக்தர்கள் வர வேண்டாம். கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Sandeep Nanduri ,Thiruvannamalai ,Kubera Kiriwalam ,
× RELATED பாப்பாரப்பட்டி அருகே மினிலாரி பள்ளத்தில் கவிழ்ந்து தொழிலாளி பலி