×

மருவத்தூர் பகுதியில் சம்பா சாகுபடிக்காக விதை நெல் தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்

தஞ்சாவூர் : அம்மாபேட்டை அடுத்த மருவத்தூர் பகுதியில் சம்பா சாகுபடிக்காக விதை நெல் தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தஞ்சை மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்காக விதை நெல் தெளிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரியின் நீர் திறப்பு மற்றும் மழைப்பொழிவு காரணமாக வயல்களை தயார்செய்து, நேரடி விதைப்பு, நாற்று நடுதல் என இரு வழிகளிலும், சம்பா சாகுபடியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். விவசாயிகள் வயல்களில் நேரடியாக விதை நெல் தெளிக்கும் முறையையும், நாற்று விட்டு அதை மீண்டும் நடவு செய்யும் முறையையும் பின்பற்றுகின்றனர்.

தஞ்சாவூர் நெற்களஞ்சியமாக இருப்பதால், குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்வது வழக்கம். இப்போது விவசாயிகள் சம்பா சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் அடுத்த மருவத்தூர் பகுதியில் விவசாயிகள் வயல்களில் விதைநெல் தெளித்து வருகின்றனர். ஒரு சில வயல்களில் எந்திரம் மூலம் நாற்று நடவு செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்காக 3.05 லட்சம் ஏக்கர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில்; கடந்தாண்டைப் போல் டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை, சம்பா பாசனத்துக்கு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

இதனால் தற்போது சம்பா சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். சம்பா சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் மற்றும் உரம் போன்ற இடுபொருட்களையும் தட்டுப்பாடு இல்லாமல் வாங்கி இருப்பு வைத்து வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் விற்பனை நிலையங்களில் கூடுதல் விலைக்கு விதை நெல் அல்லது உரங்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தனியார் விற்பனை நிலையங்களில் வாங்கும் உரங்களுக்கு ரசீது வழங்க வேண்டும்.அரசு நிர்ணயித்த விலையில் உரங்கள் மற்றும் விதை நெல்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Maruvathur ,Thanjavur ,Ammapet ,Thanjavur district ,
× RELATED செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில்...