×

மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரிப்பு

மஞ்சூர் : மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள தாய்சோலா, கேரிங்டன், கிண்ணக்கொரை பகுதிகளில் சமீபகாலமாக காட்டு மாடுகள் கூட்டம், கூட்டமாக தேயிலை தோட்டங்களில் மேய்ச்சலில் ஈடுபடுவதால் இலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடனேயே பணிக்கு சென்று வருகின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன் கேரிங்டன் பகுதி தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் இலை பறித்து கொண்டிருந்தபோது 10க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது.

இதை கண்டு அச்சம் அடைந்த தொழிலாளர்கள் உடனடியாக தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறினர். மேலும் சமீபகாலமாக இப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக வனப்பகுதிகள், தோட்டங்கள் பசுமைக்கு திரும்பியுள்ளன. சாலையோரங்களிலும் புற்கள் அதிகளவில் வளர்ந்து செழிப்பாக காணப்படுகிறது. இதனால் காட்டு மாடுகள் மேய்ச்சலில் ஈடுபட வேண்டி சாலைகளில் நடமாடுவது அதிகரித்துள்ளது.

குறிப்பாக கேரிங்டன் முதல் கிண்ணக்கொரை தணயகண்டி பகுதி வரை அடர்ந்த வனப்பகுதியின் நடுவே சாலை அமைந்துள்ளதால் இதில் பகல் நேரங்களிலேயே காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சாலையில் ஆங்காங்கே மேய்ச்சலில் ஈடுபட்டும், ஓய்வெடுத்த நிலையில் காட்டு மாடுகள் காணப்படுவதால் இவ்வழியாக செல்பவர்கள் எச்சரிக்கையுடனும் காட்டு மாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : Manjur Kinnakorai Road ,Thaisola ,Carrington, Kinakorai ,Manchuri district ,Nilgiri district ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...