×

நீடாமங்கலம் அடுத்த தேவங்குடி காலனியில் இடிந்து விழும் நிலையில் 20 தொகுப்பு வீடுகள்

நீடாமங்கலம், டிச.11: நீடாமங்கலம் அருகில் தேவங்குடி காலனி தெருவில் 20 தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அச்சத்துடன் வசித்து வரும் பொதுமக்கள் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் மேலாளவந்தச்சேரி ஊராட்சியில் உள்ளது தேவங்குடி காலனி தெரு. இக்காலனியில் உள்ள வீடுகள் அனைத்தும் கடந்த 1984ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் ஆகும். காற்று மழைகளில் பாதிப்படைந்த தொகுப்பு வீடுகளுக்கு கடந்த 2009-10 ம் ஆண்டு பழு நீக்கம் செய்ய வீட்டிற்கு தலா ரூ.15 ஆயிரம் அரசு வழங்கியுள்ளது.

அதன்பிறகு பெய்த மழை, காற்றால் மேலும் தொகுப்பு வீடுகள் சேதமடைந்து எப்போது கீழே விழும் என்ற ஆபத்தான நிலை யில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வீடுகளின் உள்ளே சிமெண்ட் காரைகள் ஏடு ஏடாக பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் அந்த வீடுகளில் உள்ள முதியவர்கள், குழந்தைகளை வைத்துக் கொண்டு மக்கள் பீதியில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது பெய்த மழையால் வீடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தகவலறிந்த திமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திமுகவை சேர்ந்த ராயபுரம் ராணிசுந்தர், ஊராட்சி தலைவர் ஷீலாமதிவாணன் ஆகியோர் பார்வையிட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு அதே இடத்தில் புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : block houses ,Devangudi ,Needamangalam ,
× RELATED உடல் ஆரோக்கியம் சீராக இருக்க இயற்கை...