×

கணக்கெடுப்பு முடிந்தவுடன் சேதமடைந்த சம்பா பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்

மன்னார்குடி, டிச. 11:கணக்கெடுப்பு முடிந்தவுடன் சேதமடைந்த சம்பா பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சி, கூத்தாநல்லூர் வட்டத்திற் குட்பட்ட கமலாபுரம், கருப்பூர், மேலமணலி, நாகராஜன் கோட்டகம், திட்டச் சேரி, அரிச்சந்திரபுரம், வடபாதிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புயல் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் பயிர் சேதங்களை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டு பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது கலெக்டர் சாந்தா உடனிருந்தார்.

பின்னர் அமைச்சர் காமராஜ் தெரிவித்ததாவது : நிவர் மற்றும் புரெவி புயலினை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. இருப்பினும், நிவர் மற்றும் புரெவி புயலால் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இதுவரையுள்ள கணக்கெடுப்பின் படி 89,232 ஹெக்டேர் நெற் பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. இதில் 1,35,590 விவசாயிகள் தங்களது 3,96,675 ஏக்கர் நெற்பயிருக்கு காப்பீடு செய்துள்ளனர். அந்த காப்பீட்டிற்கான தொகையினை பெற்று தருவதற்குரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும். மேலும் பாதிப்படைந்த நெற்பயிர்களுக்கு அரசின் சார்பாகவும் தமிழக முதல்வர் உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த கனமழையினால் பாதிப்படைந்துள்ள நெற்பயிர்கள், வீடுகள் மற்றும் கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாதிப்படைந்த பகுதிகளின் கணக்கெடுப்பு முடிந்த வுடன் அவர்களுக்கு உரிய நிவாரணம் உரிய காலத்தில் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். ஆய்வின்போது, ஆர்டிஓ புண்ணியக்கோட்டி, ஒன்றியக்குழு தலைவர் சேரன்குளம் மனோகரன், கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் லதா, தாசில்தார் ஜீவானந்தம், வேளாண் துறை உதவி இயக்குநர் ஹேமா ஹெப் சிபா நிர்மலா, முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன் வாசுகிராம், முன்னாள் ஒன்றிய குழு துணைத்தலைவர் தமிழ்செல்வன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags : completion ,
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா