×

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் சூழல் தமிழ்நாட்டில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை: தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலை கொண்டதை அடுத்து நேற்று பலஇடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. சென்னையில் மிதமானது முதல் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. வெப்பநிலை கரூர் மாவட்டத்தில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியசை விடவும் அதிகமாக இருந்தது. சென்னை, கோவை, ஈரோடு, வேலூர், திருச்சி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.

மேலும், ஒடிசா-மேற்கு வங்காளக் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் நிலை உள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் நேற்று கனமழை பெய்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களிலும் நேற்று அனேக இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்றும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாக அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நிலை 28ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வடக்கு வங்கக் கடலின் அனேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும்.

Tags : Bay of Bengal ,Tamil Nadu ,Chennai ,Karur district… ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...