×

ஆம்புலன்ஸ் டிரைவரை மிரட்டிய எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிஜிபி அலுவலகத்தில் 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் புகார்

சென்னை: ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு 108 அவசர ஊர்த்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் இருளாண்டி, தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் 108 ஆம்புலன்சில் கடந்த 16 வருடங்களாக ஓட்டுநராக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.

மருத்துவ துறை உன்னதமான சேவையில் இரவு-பகல் பாராது மக்கள் சேவை செய்து வருகிறோம். கடந்த 18ம் தேதி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி பிரதான சாலையில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்திரர் நோயாளியை ஏற்றுவதற்காக வண்டியை அதன் வழியாக இயக்கியுள்ளார்.

இந்த சமயத்தில் ஆம்புலன்சை பார்த்த எடப்பாடி, ஆள் இல்லாமல் ஏன் ஆம்புலன்ஸ் கொண்டு வந்தாய் எனவும், இனி கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால், ‘ஓட்டி வரும் டிரைவர் அதில் நோயாளியாக போகிற நிலைமை வரும்’ என அச்சுறுத்தும் விதமாக மிரட்டல் விடுத்தார். அடுக்கம்பாறை ஆரம்ப சுகாதார மருத்துவமனை செல்ல அந்த ஒரு பிரதான சாலை மட்டுமே உள்ளது.

எடப்பாடி சொன்னவுடன் அங்கு கூடியிருந்த கட்சிக்காரர்கள் அனைவரும் ஆம்புலன்சை அவர்களது கையால் அச்சுறுத்தும் வண்ணம் அடித்தனர். மேலும், ஆம்புலன்ஸ் டிவைரின் ஐடி கார்டு, சட்டை முதலியவற்றை இழுத்து வண்டியில் வரக்கூடிய செல்போனை கூட்டத்தில் உள்ளவர்கள் பறிக்க முயன்றனர். மருத்துவ சேவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களான நாங்கள் மக்களுக்காக உன்னதமான இரவு பகல் பார்க்காமல் உதவிவரும் எங்களுக்கு எதிர்க்கட்சி தலைவரின் செயல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே சுரேந்திரனை சட்டையை பிடித்து இழுத்து ஐடி கார்டு, ஆம்புலன்சில் உள்ள எமர்ஜென்சி செல்போன் ஆகியவற்றை பறிக்க முயன்ற நபர்கள் மீதும், மிரட்டல் விடுத்த எடப்பாடி பழனிசாமி மீதும் ‘தமிழ்நாடு மருத்துவத்துறை சார்ந்த நபர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : Edappadi ,108 Ambulance Workers Progress Association ,DGP ,Chennai ,Tamil Nadu ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,108 Ambulance Workers… ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...