விழுப்புரம், ஆக. 23: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைராஜ் மகன் ஆனந்த்(31). இவர் கடந்த 2021ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பெண்ணை காதலித்து வந்துள்ளார். தொடர்ந்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகி உள்ளார். இந்நிலையில் அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார். தொடர்ந்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டபோது ஆனந்த் மறுத்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்சிஎஸ்டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி பாக்கியஜோதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட ஆனந்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார். சிறைதண்டனை விதிக்கப்பட்ட ஆனந்த் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார்.
