×

நெல்லையில் அமித்ஷா கூறிய கருத்து மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகத்தின் அடிப்படையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது: செல்வப்பெருந்தகை

சென்னை: நெல்லையில் அமித்ஷா கூறிய கருத்து மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகத்தின் அடிப்படையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; “நெல்லையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய ‘ராகுல் காந்தி ஒருபோதும் பிரதமராக முடியாது’ என்ற கருத்து, உண்மையில் மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகத்தின் அடிப்படையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.

இந்த நாடு ஜனநாயக நாடாகும். பிரதமர் யார் ஆக வேண்டும் என்பதை தீர்மானிப்பது மக்களின் வாக்குகள் தான். ஒன்றிய உள்துறை அமைச்சர் அல்லது ஏதேனும் ஒருவரின் வாய்மொழிக் கட்டளையோ, தாழ்வான அரசியல் கருத்தோ அதைக் குறிக்கவில்லை.

இன்று முழு இந்தியாவிலும் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என கோடிக்கணக்கான மக்கள் “நியாயம் – சமத்துவம் – சமூக நீதி” என்பதையே தங்கள் அரசியல் இலட்சியமாகக் கொண்டுள்ளனர். அந்த இலட்சியங்களுக்காகத் தான் ராகுல் காந்தி அவர்கள் போராடுகிறார்.

நீதி, அன்பு, சமத்துவம் ஆகியவற்றை குரலாக எடுத்துரைக்கும் ஒருவரை மக்கள் பிரதமராக கொண்டு வருவார்களா, இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள் . வரலாறு கூறுவது ஒரே உண்மை – மக்களின் விருப்பத்தை யாராலும் தடுக்க முடியாது.

உண்மையில், இந்த மாதிரியான ஆளும் கட்சியின் தோல்விப் பயத்தை வெளிப்படுத்தும் கூற்றுகளே, ராகுல்காந்தி நாளைய பிரதமர் என்ற உண்மையை உறுதியாக்குகிறது” என தெரிவித்துள்ளார்.

Tags : Amitsha ,Chennai ,Tamil Nadu Congress Committee ,Nellai ,X ,Union Minister of Interior ,Paddy ,
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்சமாக...