கரூர், டிச. 11: கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுககு அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாமாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின்கீழ் எந்தவித நிபந்தனையும் இன்றி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கும், படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று கல்வி நிலையங்களிலேயே சமர்ப்பிக்க வேண்டும்.