×

மண்ணச்சநல்லூர் அருகே எதுமலையில் முதல்வர் மருத்துவ காப்பீட்டு அட்டை புதிதாக தருவதாக பண வசூல் மோசடி

திருச்சி, டிச.10: எதுமலையில் முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீட்டு அட்டை புதியதாக வழங்குவதாக கூறி 600 பேரிடம் தலா ரூ.100 வீதம் வசூல் செய்த மாத்தூரை சேர்ந்த வாலிபரை கலெக்டர் உத்தரவின் பேரில் போலீசார் கைது செய்தனர். மண்ணச்சநல்லூர் அடுத்த கரியமாணிக்கம் பகுதி, எதுமலை கிராமத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டை புதியதாக வழங்குவதற்காக தன்னை நியமனம் செய்துள்ளதாக புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரைச் சேர்ந்த கோபால் மகன் தினேஷ்(25) என்பவர் நபர் ஒருவருக்கு ரூ.100 வீதம் சுமார் 600 பேரிடம் பணம் வசூல் செய்துள்ளார்.


இந்த மோசடி எதுமலை கிராம சமுதாய சேவை மைய கட்டிடத்தில் கடந்த 2ம் தேதி முதல் நடைபெற்று வந்துள்ளது. இது தொடர்பாக சந்தேகம் அடைந்த கிராம மக்கள் சமுதாய சேவை மைய கட்டிடத்தில் முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக மண்ணச்சநல்லூர் தாசில்தார், சிறுகனூர் இன்ஸ்பெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டதில், தினேஷ், எதுமலை கிராம ஊராட்சி மன்ற தலைவரிடம் தவறான தகவல் அளித்து கிராம மக்களிடம் ரூ.100 பண வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தினேஷிடமிருந்து லேப்டாப், பிரிண்டர், லேமினேசன் கருவி ஆகியவைகளை போலீசார் கைப்பற்றி, அவரை கைது செய்தனர்.

Tags : Edumalai ,Chief Minister ,Mannachanallur ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...