×

ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு திட்டம்

திருத்துறைப்பூண்டி, டிச.10: திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஆய்வு செய்ய வந்தார். அப்போது, திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரும், தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளருமான பாஸ்கர் முதல்வரிடம் மனு கொடுத்தார். அதில் தெரிவித்திருப்பதாவது: மத்திய, மாநில அரசுகள் இணைந்தும் தனித்தனியாகவும் நிலமற்ற ஏழை மக்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை நீண்ட காலமாக செயல்படுத்தி வருகின்றன. இத்திட்டத்தில் 1980 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் கட்டி வழங்கப்பட்ட வீடுகள் வசிக்க முடியாத அளவிற்கு பழுதடைந்துள்ளன. இதில் வசித்துவரும் பயனாளிகள் போதிய வேலைவாய்ப்பும், வருமானமும் கிடைக்காத வாழ்க்கை நிலையில் புதிதாக வீடுகள் கட்டும் வசதியற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இலவச வீடுகளை முழுமையாக நீக்கிவிட்டு அந்த இடங்களில் புதிய வீடுகள் கட்டித்தரும் திட்டம் ஒன்றை அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.கடந்த 2005ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட உழவர் பாதுகாப்பு திட்டத்தில் முதன்மை உறுப்பினர்களுக்கு மட்டுமே விபத்து கால மரணங்களில் நிதிஉதவியை பெறுவதற்கு தகுதியானவர்கள் என்றும், சார்பு உறுப்பினர்களுக்கு உதவிபெறும் தகுதியில்லை என்று வேறுபாடு காட்டப்பட்டுள்ளது. இது இயற்கை நீதிக்கு எதிரானது.

எனவே ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பொருந்துமாறு அரசாணை வெளியிட வேண்டும், கஜா புயலின் தாக்கத்திலிருந்து இன்னும் மீண்டு வராத ஏழை மக்களுக்கு வீடற்ற ஏழைகளுக்கு பாதுகாப்பான ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்ற தங்கள் தலைமையிலான அரசின் அறிவிப்பின் திட்டம் இன்னும் செயல்படுத்தப்படாமல் தடைபடுத்தப்பட்டுள்ளது. மீண்டும் செயல்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும். திருவாரூர் மாவட்டத்திற்கு ஊராட்சிக்கு ஒரு இயற்கை பேரிடர் மையம் அமைத்து தர வேண்டும். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிடே வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

Tags : poor ,
× RELATED இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை...