×

குமுளியில் 25 ஆண்டு கால ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஜேசிபியை மறித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

கூடலூர், டிச. 10: தேனி மாவட்டத்தின் தமிழக- கேரள எல்லையாக உள்ள குமுளி தமிழக பகுதி கூடலூர் நகராட்சியின் 21வது வார்டில் உள்ளது. குமுளி சாலையின் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளை ஆக்கிரமித்து சுமார் 25 ஆண்டுகளாக 20க்கும் மேலான டீ கடைகள், பெட்டி கடைகள் வைக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழக எல்லை பகுதியில் பஸ்கள் நிறுத்தப்படும் போது அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் ரோடு அகலப்படுத்தும் பணிக்காக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் அங்குள்ள கடைகளை அகற்றுமாறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடந்த மாதம் நோட்டீஸ் கொடுத்தனர். பின்னர் குமுளி காவல் நிலையத்தில் ஆக்கிரமிப்பாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில், அவர்கள் கடைகளை அகற்றி விடுவதாக கூறினர்.

இந்நிலையில் நேற்று ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற குமுளிக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் வந்தனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் 25 ஆண்டு காலமாக இந்த கடைகளை வைத்து பிழைப்பு நடத்தி கொண்டிருக்கிறோம், எங்களுக்கு கால அவகாசம் வேண்டும், மாற்று இடம் வேண்டும் என கோரி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். எனினும் அதிகாரிகள் அதை ஏற்க மறுத்து, ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்ற துவங்கினர். அப்போது கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் ஜேசிபியை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்தும், படுத்து கொண்டும் போராட்டம் நடத்தினர். இன்னும் சிலர் ஜேசிபியை பிடித்து தொங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கூடலூர் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் போலீசார் போராட்டம் செய்தவர்களை அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

Tags : removal ,protest ,JCP ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...