×

குஜிலியம்பாறை பகுதியில் சின்ன வெங்காய பயிரில் வேர் அழுகல் நோய் தாக்குதல் விவசாயிகள் பாதிப்பு

குஜிலியம்பாறை, டிச. 10: குஜிலியம்பாறை பகுதியில் சின்ன வெங்காயப் பயிரில் வேர் அழுகல் நோய் தாக்குதல் அதிகளவில் உள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை தாலுகா மிகவும் வறட்சியான பகுதியாகும். இப்பகுதி மக்கள் கால்நடைகளை வளர்த்தும், விவசாயத்தை நம்பியே உள்ளனர். இப்பகுதி விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் ஆண்டுதோறும் பல ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு போதிய மழை இருந்தும், வேர் அழுகல் நோய் தாக்குதல் அதிகளவில் உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டும் இப்பகுதியில் வெங்காயப் பயிரில் ஏற்பட்ட வேர் அழுகல் நோயால் விளைச்சல் குறைந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த பல ஆண்டுகளாக சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகிறோம்.

90 நாள் பயிரான வெங்காயத்தை டிசம்பர் மாதங்களில் அறுவடை செய்வோம். ஆனால் கடந்த 3  ஆண்டுகளாகவே கண்டுபிடிக்க முடியாத வகையில் வேர் அழுகல், காய்ந்து மடிதல் நோய்களால் பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. பூச்சி, பூஞ்சை மருந்துகள் தெளித்தும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆண்டுக்கு ஒரு முறை சாகுபடி செய்து வரும் எங்களுக்கு, நோய் தாக்குதலால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இடைவிடாது மழை பெய்து வரும் நிலையில், இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

ஏக்கருக்கு உழவு, நடவு, பார் பிடித்தல், விதை வெங்காயம், அடிஉரம், களை எடுத்தல், மருந்து என ரூ.70 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். இவையனைத்தும் கடன் பெற்றே பார்த்து வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக ஏற்பட்ட இந்நோய் பாதிப்பால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டறிந்து நிவாரணம் வழங்க, குஜிலியம்பாறை வேளாண் துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Root ,rot attack ,area ,Kujilyampara ,
× RELATED என் படத்துக்கு கூட்டம் வருமா என்று...