வாஷிங்டன்: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது 50% வரிவிதிப்பு அறிவிக்கப்பட்டது என்று வெள்ளை மாளிகை செயலர் விளக்கம் அளித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, ரஷ்யாவுக்கு மறைமுக அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டார். இந்த புதிய வரிவிதிப்பு முதலில் விதிக்கப்பட்ட 25% வரி கடந்த 7ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
மேலும் கூடுதல் 25% வரி வரும் 27ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதனால், மொத்தமாக 50% வரி வரும் 27ம் தேதி முதல் முழுமையாக அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லெவிட் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் டிரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 25 விழுக்காடு வரியுடன் கூடுதலாக 25 விழுக்காடு வரி விதிக்கப்பட்டு, இந்தியாவின் இறக்குமதி வரி 50 விழுக்காடாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஷ்யாவுக்கு மறைமுக அழுத்தம் கொடுக்கப்பட்டு, போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர முடியும். அதிபர் டிரம்ப் பதவியில் இருந்திருந்தால், இந்த போரே மூண்டிருக்காது. ரஷ்ய அதிபர் புதினும் அதை உறுதி செய்துள்ளார். அதிபர் புதினை சந்தித்த 48 மணி நேரத்திற்குள், ஐரோப்பிய தலைவர்கள் அனைவரும் வெள்ளை மாளிகைக்கு விரைந்து வந்து டிரம்பை சந்தித்தனர். போரின் போக்கு மற்றும் ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்த டிரம்பின் விளக்கங்கள் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் முந்தைய நிர்வாகம் இதை செய்யத் தவறியது’ என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார். போரை முடிவுக்கு கொண்டுவர புதின் மற்றும் ஜெலன்ஸ்கியுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், தனது பதவிக்காலம் முடிந்த பிறகும் நீடித்த அமைதியை உறுதி செய்வதற்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் நேட்டோ அமைப்புடன் அதிபர் டிரம்ப் ஆலோசித்து வருவதாகவும் கரோலின் லெவிட் தெரிவித்தார்.
