×

புளியங்குடி அருகே நள்ளிரவில் சமரணையின் ஷட்டர் உடைத்து சேதம்

புளியங்குடி, டிச. 10: புளியங்குடி அருகே கோட்டமலை  ஆற்றில் இருந்து வரும் தண்ணீரில் கட்டப்பட்ட சமரணையின் ஷட்டரை  மர்மநபர்கள் நள்ளிரவில் உடைத்து சேதப்படுத்தினர். இதை கண்டித்து பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி புளியங்குடிக்கு மேற்கே கோட்டமலை ஆற்றில் இருந்து வரும் தண்ணீரில் விழங்கடிகல் என்ற இடத்தில் 2019ம் ஆண்டு சமரணை  கட்டப்பட்டது. இதில் உள்ள இருஷட்டர்கள் வாயிலாக பல்லாயிரக்கணக்கான விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இதனிடையே வாசுதேவநல்லூர் பிர்க்காவுக்கு செல்லும் கால்வாய் மேடாக இருப்பதால் அதன் ஷட்டர் திறந்துவைத்து புளியங்குடி பகுதி குளங்களுக்கான தண்ணீர் சமரணை நிரம்பியபின் செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஷட்டர்களை திறக்கும் கருவியானது சம்பந்தப்பட்ட பிடிஓ அல்லது  முக்கியமான விவசாயிகளிடம் மட்டுமே இருக்கும்.

 இந்நிலையில் நேற்று முன்தினம்  நள்ளிரவு குடிப்போதையில் வந்த மர்மநபர்கள், வாசுதேவநல்லூர் பகுதிக்கு தண்ணீர் செல்லும் ஷட்டரை அடைத்து விட்டு புளியங்குடி பகுதி குளங்களுக்கு செல்லும் ஷட்டரை திறந்து விட்டனர். மேலும் திறந்துவிட்ட ஷட்டர் கதவுகளை அடைக்க முடியாதவாறு அதை சம்மட்டியால் உடைத்து சேதப்படுத்திச் சென்றனர். இந்நிலையில் நேற்று காலையில் வயலுக்கு வந்தபோது இதுகுறித்து தெரியவந்ததும் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இவ்வாறு சமர் அணையின் ஷட்டரை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் வாசு பகுதிக்கு செல்லும் ஷட்டரை திறந்து விட்டனர். மேலும்  திறந்துவிட்ட ஷட்டரை மூடவும், அணையின் ஷட்டரை  உடைத்து சேதப்படுத்தியோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். அதன்பிறகே விவசாயிகள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

Tags : Samarana ,Puliyangudi ,
× RELATED தென்காசியில் காரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்து: 6 பேர் பலி