×

பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் திறந்த வெளி கிணறுகளை வலை போட்டு மூடுவது எப்போது?.. அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் திறந்த வெளியில் உள்ள கிணறுகளை வலை போட்டு மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட கிராமங்களில் ரோட்டோரம் உள்ள பல தரைமட்ட கிணற்றின் மேல் பகுதி மூடப்படாமல் இருக்கிறது. இது கிராம பகுதியில் சாலையோரம் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதேபோல தோட்டங்கள், குடியிருப்புகள், பள்ளிகள் என மக்கள் நடமாட்டம் உள்ள பல்வேறு பகுதிகளிலும் திறந்த வெளி கிணறுகள் உரிய பாதுகாப்பின்றி அதிகளவில் உள்ளது. இதில் குறிப்பாக மக்கள் அதிகம் வசிக்கும் குஞ்சிபாளையம் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்து, சுற்று வட்டார பகுதிக்கு தேவையான தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.

மேலும், அவ்வப்போது தண்ணீர் அதிகளவு தேங்கியிருக்கும்போது, அப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக தண்ணீர் எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். தற்போது, அந்த கிணறு எந்தவித பராமரிப்பின்றி பயன்படாத நிலையில் உள்ளது. இருப்பினும், இந்த திறந்த நிலையில் உள்ள கிணற்றின் மேல் பகுதியை மூடாமல் திறந்த வெளியாக இருப்பது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த ரோட்டோரம் உள்ள இந்த கிணற்றின் மேல் வலை போட்டு மூடாமல் இருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த கிணற்று அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. சில நேரங்களில் பள்ளி இடைவெளியின்போது மாணவர்கள் பலரும் இந்த கிணற்றை எட்டி பார்ப்பது வாடிக்கையாக உள்ளது.

இதனால், அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திறந்தவெளியில் உள்ள கிணற்றின் மேல் பகுதியை மூடி பாதுகாப்புடன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் பலரும் சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

திறந்த வெளி கிணறுகளால் அச்சம்
பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் ஆலம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், சிக்கராயபுரம், வக்கம்பாளையம், வடக்கிபாளையம், முத்தூர், நடுப்புணி, வளந்தாய மரம், பட்டினம், கோமங்கலம், பூசாரிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் திறந்த வெளி கிணறுகளால் அந்த வழியாக செல்வோர் அச்சமடைகின்றனர்.

நடவடிக்கை எடுக்கப்படுமா?
திறந்த வெளி கிணறுகளை வலை போட்டு மூடவும், பயன்படுத்தாத கிணறுகளை மூடவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Pollachi ,Pollachi taluka ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...