×

அரூர் பகுதியில் மரவள்ளி அறுவடை பணிகள் தீவிரம்

அரூர், டிச.10: அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், மரவள்ளிகிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.  இப்பகுதியில் முள்ளுவாடி, தாய்லாந்து, பர்மா, குங்குமரோஸ் ஆகிய ரகங்களில் மரவள்ளி பயிரிட்டுள்ளனர். மேலும், வறட்சி காலங்களில், நிலத்தடி நீர் மட்டம் குறையும் போது, சொட்டு நீர் பாசனம் அமைத்து சாகுபடி செய்கின்றனர்.  ஒரு ஏக்கருக்கு 10 முதல் 13 டன் வரை விளைச்சல் கிடைக்கிறது. இங்கு விளைவிக்கப்படும் மரவள்ளி கிழங்குகள் சேலம், ஆத்துார், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கிழங்கு மில்லுக்கு விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர். இந்நிலையில், புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.  இதனால் நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, சூரநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ள வயல்களில், தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கிழங்குகள் அழுகி விடுமோ என்ற அச்சத்தில், விவசாயிகள் தற்போது மரவள்ளி கிழங்குகளை அறுவடை செய்யும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : cassava harvesting ,Arur ,area ,
× RELATED டூவீலர்கள் மோதி தொழிலாளி பலி