×

சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்ட நிலையில் நீலகிரி சோதனைச்சாவடிகளில் கொரோனா பரிசோதனை தீவிரம்

ஊட்டி, டிச. 10:  நீலகிரி  மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில் சோதனைச்சாவடிகளில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி  7605 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 7350 பேர் குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர். 213 பேர் சிகிச்சையில் உள்ளனர். நீலகிரி  மாவட்டத்தை பொருத்த வரை கடந்த அக்டோபர் இரண்டாவது வாரம் வரை கொரோனா  பாதிப்பு எண்ணிக்கை ஏறு முகத்தில் இருந்தது. அதன்பின் மாவட்ட நிர்வாகம்  மற்றும் சுகாதாரத்துறை எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளால் அக்டோபர் மாத  இறுதியில் இருந்து நீலகிரியில் கொரோனா பாதிப்பு குறைய துவங்கியது. நாள்  ஒன்றுக்கு 10ல் இருந்து 25 பேர் வரை மட்டுமே பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.  

இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் இ-பாஸ் முறையில் தளர்வு  அளிக்கப்பட்டு இ-பதிவு முறை அளல்படுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள்  வருகை அதிகரித்தது. தொடர்ந்து பூங்காக்கள் தவிர்த்து பிற சுற்றுலா  தலங்களும் கடந்த 7ம் தேதி முதல் திறக்கப்பட்டன. இதன் காரணமாக  தமிழகத்தின் பிற பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி கேரளா,  கர்நாடகா மாநில சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இதனால் 266  நாட்களுக்கு பிறகு ஊட்டியில் சுற்றுலா தொழில் களை கட்டியுள்ளது.

இதனிடையே  சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், கொரோனா தொற்று மீண்டும்  அதிகரிக்காமல் இருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு  வருகின்றன. அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கொரோனா பரிேசாதனைகள்  மேற்கொள்ளப்படுகின்றன. சுற்றுலா தலங்களில் தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல்  வெப்பநிலை பரிசோதித்த பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். உடல் வெப்பநிலை  அதிகமாக இருப்பவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

இது குறித்து  சுகாதார பணிகள் துைண இயக்குநர் பாலுச்சாமி கூறுகையில், ‘‘நீலகிரி  மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கொரோனா பரிேசாதனை தொடர்ந்து  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா  தலங்களிலும் அந்தந்த துறை நிர்வாகங்கள் சார்பில் தெர்மல் ஸ்கேனர் கொண்டு  உடல் வெப்பநிலை பரிசோதித்த பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். நீலகிரியில்  கொரோனா பரிசோதனைக்காக இதுவரை 2 லட்சத்து 37 ஆயிரத்து 759 சளி மாதிரிகள்  சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா  பாதிப்பு தற்போது குறைவாகவே உள்ளது, என்றார்.

Tags : corona testing ,checkpoints ,Nilgiris ,tourist sites ,
× RELATED உதகை செல்வோருக்கு இ-பாஸ் நடைமுறை அமல்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு!