சென்னை: தென்னிந்தியப் பகுதிகளில் மேல் நிலை கொண்டுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடஙகளில் மழை பெய்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த தீவிரக் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நேற்று அதிகாலையில் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் கோபால்பூருக்கு அருகே கரையைக் கடந்து சென்று, மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து சென்று தெற்கு ஒடிசா பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. பின்னர் இது இன்று படிப்படியாக வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இது தவிர, தெற்கு குஜராத்- வடக்கு கேரளா பகுதிகளுக்கு அப்பால் உள்ள வட கிழக்கு- தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டுள்ளது. இந்த நிகழ்வுகளின் காரணமாக தமிழகத்தில் நேற்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசியது. அதன் தொடர்ச்சியாக இன்றும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இது 25ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் வானம் இன்று மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
