×

மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தால் தொழில்கள் முடக்கம்

கோவை, டிச. 10: மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தால் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தொழில்முனைவோர்கள் முடிவெடுத்துள்ளனர். இது குறித்து கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறியதாவது: சிறு, குறு தொழில் முனைவோர்கள் மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தால் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். 20 முதல் 40 சதவீதம் வரை மூலப்பொருட்கள் விலை ஏற்றம் அடைந்துள்ளது. இதன் விளைவாக ஜாப் ஆர்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. திடீரென மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தால் ஏற்கனவே ஜாப் ஆர்டர்கள் பெற்றவர்கள் இதற்கு முன்னர் பேசிய விலைக்கே பொருட்களை உற்பத்தி செய்து தரமுடியவில்லை. எல்லா வடிவத்திலும் பாதிப்பு ஏற்படுள்ளது.

ஸ்டீல் 25 சதவீதம், காப்பர் 30 சதவீதம், அலுமினியம் 17 சதவீதம் மற்ற பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட மூலப்பொருட்கள் விலை 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்படுவதைபோல தொழில்துறை மூலப்பொருட்கள் விலையும் அதே போல் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஒர் ஆண்டுக்காவது அதன் விலையில் மாற்றம் ஏற்படுத்தக்கூடாது. மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும். கோவையில் மூலப்பொருட்கள் வங்கி மீண்டும் திறக்கப்பட வேண்டும். மூலப்பொருட்கள் பதுக்கி வைக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். ஜி.எஸ்.டி., கொரோனா, மூலப்பொருட்கள் விலை உயர்வு என பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர் மீண்டு வர சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதம் வரை மட்டுமே விதிக்கப்படவேண்டும். இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக சிறு, குறு தொழில்முனைவோர்கள் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இதனை கருத்தில் கொண்டு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

ஸ்டீல் போன்ற மூலப்பொருட்கள் எளிதாக கிடைக்க பீளமேடு பகுதியில் மேம்பால பணிக்காக மூடிய கிடங்கை உடனடியாக திறக்க வேண்டும். மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த பிரைஸ் மானிடரிங் கமிட்டி அமைக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15ம் தேதி கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறினார். பேட்டியின் போது கொசிமா, கவ்மா, காஸ்மா, டேக்ட், காஸ்மாபேன் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags : Businesses ,
× RELATED சிறு வணிகர்களுக்கான வணிக வரி சமாதான...