வீரகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையால் அழுகி நாசமாகும் பருத்தி செடிகள்

கெங்கவல்லி, டிச.10: தொடர் மழை காரணமாக, வீரகனூர் சுற்றுவட்டார பகுதியில் பருத்தி பயிரிட்டுள்ள வயலில் தண்ணீர் தேங்கி செடிகள் அழுகத்துவங்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா வீரகனூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள ராமநாதபுரம், வெள்ளையூர், பகடப்பாடி, கைகளத்தூர், நூத்தப்பூர், திட்டச்சேரி, லத்துவாடி, நத்தக்காடு, ராஜகோபாலபுரம், கிழக்கு ராஜாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவிலான பருத்தி பயிரியிட்டுள்ளனர்.  சேலம் மாவட்டத்திலேயே அதிகளவில் பயிர் சாகுபடி செய்துள்ளது, கெங்கவல்லி பகுதியில் தான். புயல் காரணமாக சேலத்தில் பெய்த தொடர் மழையால் நெல், வாழை மற்றும் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கெங்கவல்லி பகுதியில் பருத்தி செடியில் காய் பிடித்து செழித்து வளர்ந்துள்ள நிலையில், அளவுக்கு அதிகமாக மழைநீர் வயலில் தேங்கியுள்ளதால் செடிகள் அழுகத்துவங்கியுள்ளது. இதுகுறித்து பருத்தி விவசாயிகள் கூறுகையில், ‘ஆடி மாசம் பருத்தி விதை நடவு செய்து, தை மாதம் அறுவடை தொடங்கப்படும். ஒரு ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்ய ₹30 ஆயிரம் வரை செலவாகும். செழித்து வளர்ந்து செடியில் காய்கள் அதிகம் பிடித்துள்ளது. தற்போது பனிக்காலம், பகலில் வெயில் அதிகளவில் அடிக்கும் போது காய் முற்றி, அறுவடைக்கு தயாராகும். இந்நிலையில் புயல் காரணமாக பெய்து வரும் தொடர் மழையால், செடிகள் அழுகி வருகிறது. ஏக்கருக்கு ₹10 ஆயிரம் வரை குத்தகைக்கு முன்பணம் கொடுத்து, பருத்தி பயிரிட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வேளாண் அதிகாரிகள் பருத்தி செடிகளை நேரில் பார்வையிட்டு, ஏக்கர் ஒன்றுக்கு ₹10 ஆயிரம் வீதம், தமிழக அரசிடம் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்,’ என்றனர்.

Related Stories:

>