×

சைபர் குற்றங்களை தடுக்க குமரி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு குறும்படம் போலீசாரே நடித்துள்ளனர்

நாகர்கோவில், டிச.10: சைபர் க்ரைம்களை தடுக்கும் வகையில், குமரி மாவட்ட காவல்துறை சார்பில் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதை எஸ்.பி. பத்ரி நாராயணன் நேற்று  வெளியிட்டார்.
பேஸ்புக், வாட்ஸ் அப் தொடங்கி பல்வேறு சமூக வலை தளங்கள் மூலம் இளம்பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. பண மோசடி, காதல் மோசடி என பல்வேறு வகையிலான மோசடிகள் சமூக வலை தளங்கள் மூலம் அரங்கேறுகின்றன. இவ்வாறு ஏமாந்து போன பலர் வாழ்வில் தற்கொலை செய்துள்ளனர். குமரி மாவட்டத்தில் இளம்பெண்களிடம் சமூக வலை தளங்கள் மூலம் பழகி அவர்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய காசி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறாக பல்வேறு விதமான மோசடிகளில் இருந்து மக்களை மீட்கும் வகையில், குமரி மாவட்ட காவல்துறை சார்பில் ‘விழித்திரு’ என்ற தலைப்பில் குறும்படம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

 முழுக்க, முழுக்க காவல்துறையை சேர்ந்தவர்கள் தான் இதில் நடித்துள்ளனர். இந்த குறும்படம் வெளியீட்டு நிகழ்ச்சி, நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது.
எஸ்.பி. பத்ரி நாராயணன் இந்த குறும்படத்தை வெளியிட்டார். மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. கணேசனின் அறிமுக உரையுடன் குறும்படம் தொடங்குகிறது. தங்களது தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய நபரால் தற்கொலை செய்ய போகும்,  ஒரு குடும்பத்தை காட்டி, அவர்கள் ஏமாந்த விதம் எப்படி? என்பதை விவரிக்க தொடங்குகிறது. இந்த குறும்படத்தில் பல்வேறு விதமான விழிப்புணர்வுகள் உள்ளதாக எஸ்.பி. பத்ரிநாராயணன் கூறினார். இதில் நடித்த போலீசாரையும் அவர் பாராட்டினார். பொதுமக்களுக்கு இதை விளக்கும் வகையில் பல்வேறு இடங்களில் இதை ஒளிபரப்பு செய்யவும், வாட்ஸ் அப், பேஸ் புக், யுடிப் மூலம் பிரபலப்படுத்தவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.

Tags : Kumari Police ,
× RELATED உயிர்த்துளி என்ற பெயரில் குமரி...