×

குமரி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

நாகர்கோவில், டிச.10: குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தக்கலை அரசு மருத்துவமனை மற்றும் குருந்தன்கோடு மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் அவசர சிகிச்சை பிரிவு, சிறுநீர் பிரித்தல் பிரிவு, ரத்த வங்கி, நுண்ணுயிர் நோக்கி காசநோய் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் வாயிலாக நடைபெற்றுவரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையின் தரத்தை அதிகரிப்பதோடு, அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அரவிந்த், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மெர்சி ரம்யா ஆகியோர் முன்னிலையில், ஊராட்சிகளில் நடைபெற்றுவரும், சாலைப்பணிகள், ஜல் ஜீவன் மிஷன் திட்டப் பணிகள், பசுமை வீடுத்திட்டப்பணிகள், கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது. மேலும், அனைத்துத்திட்டப் பணிகளும் தரமானதாக இருக்க அந்தந்த ஊராட்சிகளிலுள்ள அலுவலர்கள் அவ்வப்போது பணிகளை கண்காணித்து உறுதி செய்வதோடு, பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார். இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) பிரகலாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பத்ஹூ முகம்மது நசீர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சையத் சுலைமான், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் ஏழிசைசெல்வி, உதவி திட்ட மேலாளர் டாக்டர் அம்ஜிஸ் வசந்த், குழந்தைகள் மருத்துவர் கோசல்ராம், தொற்றாநோய் பிரிவு மருத்துவர் கிருஷ்ணபிரசாத், மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கொரோனா கண்டறியும் சிறப்பு முகாம்
கொரோனா பரவல் குறைந்த நிலையிலும், தொடர்ந்து தினமும் மாநகர பகுதியில் கொரோனா தொற்று கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்கள் மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜித் உத்தரவின்பேரில், மாநகர் நல அதிகாரி டாக்டர் கின்சால் மேற்பார்வையில் சுகாதார பணியாளர்கள் நடத்தி வருகின்றனர்.   நாகர்கோவில் மாநகர பகுதியில் 6 இடங்களில் கொரோனா கண்டறியும் முகாம் நடந்தது. கிருஷ்ணன்கோவில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கே.பி.ரோடு, எம்.எஸ்.ரோடு பகுதியிலும், வடசேரி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் புதுகுடியிருப்பு பகுதியிலும், வடிவீஸ்வரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கல்மட தெருவிலும், வட்டவிளை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பெரியவிளையிலும், தொல்லவிளை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மேல ஆசாரிபள்ளம் பகுதியிலும் முகாம் நடந்தது.

Tags : Collector raids ,health center ,district ,Kumari ,
× RELATED சிங்கத்தாகுறிச்சி சுகாதார...