×

பொதுப்பணித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட 165 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.8.2025) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித்துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக உதவிப் பொறியாளர் (சிவில்) மற்றும் (மின்) ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 165 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளின் கட்டட உட்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், பராமரிப்பதிலும் பொதுப்பணித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. பொறியியல் கட்டுமான நிபுணத்துவத்துடன் மாநில உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் இத்துறை 165 வருடங்களுக்கு மேலாக மக்களுக்குச் சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. மாநிலம் முழுவதும் அரசுக் கட்டடங்களைக் கட்டுதல் மற்றும் பராமரித்தல் போன்ற பொறியியல் சேவைகளை வழங்குவதோடு, கட்டடக்கலை, திட்டம் மற்றும் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, மின் மற்றும் தரக்கட்டுப்பாடு போன்ற பிரிவுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளால் புதிய கட்டுமான முறைகளை மேற்கொண்டு அரசுத் துறைகளுக்கான நீடித்த மூலதன சொத்துக்களை உருவாக்குதல், பல்வேறு அரசுத் துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வரவு செலவு பொது திட்ட வரம்புகளுக்குள் கட்டடங்களைக் கட்டி, அவற்றின் திடத்தன்மை, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்தல், பாரம்பரியக் கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவகங்களைப் பாதுகாத்தல், புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைத்தல், நவீனத் தொழில்நுட்பத்துடன் புதுமையான கட்டுமான நடைமுறைகளை செயல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை பொதுப்பணித்துறை வாயிலாக அரசு மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பொதுப்பணித்துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெற அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பொதுப்பணித்துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக உதவிப் பொறியாளர் (சிவில்) பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 98 நபர்களுக்கும், உதவிப் பொறியாளர் (மின்) பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 67 நபர்களுக்கும், என மொத்தம் 165 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக உதவிப் பொறியாளர் (சிவில்) 406 நபர்கள், உதவிப் பொறியாளர் (மின்) 103 நபர்கள், முதுநிலை உதவி கொதிகலன்கள் இயக்குநர் 4 நபர்கள், இளநிலை கட்டடக் கலைஞர் 4 நபர்கள், இளநிலை வரைதொழில் அலுவலர் 156 நபர்கள், இளநிலை உதவியாளர் 55 நபர்கள், தட்டச்சர் 32 நபர்கள் மற்றும் கருணை அடிப்படையில் உதவி வரைவாளர் 11 நபர்கள், இளநிலை உதவியாளர் 17 நபர்கள், பதிவுறு எழுத்தர் 8 நபர்கள், அலுவலக உதவியாளர் 3 நபர்கள் என மொத்தம் 799 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச்செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் ச. மணிவண்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Department of Public Works ,Chief Minister ,MLA ,Tamil Nadu Civil Servants Selection Board ,K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu Public Personnel Selection Commission ,Public Works Department ,
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்சமாக...