×

உயிர்ப்பலி ஏற்பட்டும் பாடம் கற்காத அதிகாரிகள் நெற்குன்றம் அழகம்மாள் தெருவில் திறந்தநிலை கால்வாயால் திக்..திக்..பொதுமக்கள் அச்சம்

அண்ணாநகர்: நெற்குன்றம் அழகம்மாள் தெருவில் உள்ள திறந்தநிலை கால்வாயால் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் அழகம்மாள் தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சமீபத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால், பல இடங்களில் மேன்ஹோல் அமைக்காததால் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது.  மழை பெய்யும் போது, இந்த கால்வாய் தெரியாதபடி வெள்ளம் ஓடுவதால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் இந்த திறந்தநிலை கால்வாயில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக மேன்ஹோல்களை அமைக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.தற்போது, மழைக்காலம் என்பதால், பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, திறந்த நிலை கால்வாயில் மேன்ஹோல் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘புதிதாக அமைத்த மழைநீர் கால்வாயில் பல இடங்களில் மேன்ஹோல்கள் இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. மழை பெய்யும் போது, தெருவில் வெள்ளம் ஓடுவதால், இதில் பொதுமக்கள் தவறி விழும் அபாயம் உள்ளது. இதுபற்றி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் அலட்சியமாக உள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திறந்தநிலை கால்வாயில் விழுந்து தாய், மகள் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், விழித்துக்கொள்ளாத அதிகாரிகள், அலட்சிய போக்குடன் செயல்பட்டு வருகின்றனர். இதனால், அச்சத்தில் உள்ளோம்,’’  என்றனர்.

Tags : public ,canal ,Nerkunram Alagammal Street ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...