- சென்னை
- காஞ்சிபுரம்
- வேலூர்
- இன்டார்ச் கட்டிட தீர்வுகள்
- ஈக்காட்டுத்தாங்கல் டிஃபென்ஸ் காலனி,
- கிண்டி, சென்னை
சென்னை: சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் டிபன்ஸ் காலனியில் உள்ள ‘இன்டர்ஆர்க் பில்டிங் சொல்யூஷன்ஸ்’ என்ற கட்டுமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் பெரிய அளவில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான பணிகள் செய்து வருகிறது. இந்த கட்டுமான நிறுவனம் 2023-24ம் ஆண்டுகளில் தங்களது வருமானத்தை குறைத்து ஒன்றிய அரசுக்கு கணக்கு காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதை தொடர்ந்து, நிறுவனத்திற்கு சொந்தமான காஞ்சிபுரம், வேலூர் பகுதியில் உள்ள அலுவலகங்களில் நேற்று அதிகாலை சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். அதேபோல், கட்டுமான பணிக்கு பெரிய அளவில் இரும்பு உற்பத்தி நிறுவனத்தில் பல கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதைதொடர்ந்து, கட்டுமான நிறுவனத்திற்கு இரும்பு கம்பிகள் வழங்கிய, இரும்பு உற்பத்தி நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக, கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள இரும்பு உற்பத்தி நிறுவனத்தின் தலைமை அலுவலகம், காஞ்சிபுரத்தில் தொழிற்சாலையிலும் சோதனை நடந்தது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம், வேலூர் என மொத்தம் 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு வரை சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், வரி ஏய்ப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், கடந்த 2 ஆண்டுகளாக 2 நிறுவனங்களும் பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி கணக்காய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு முடிவில் தான் 2 நிறுவனங்களும் ஒன்றிய அரசுக்கு எத்தனை கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது என்ற முழு விபரங்கள் தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
