×

கள்ளக்குறிச்சியில் இருந்து பெங்களூருக்கு அரசு பேருந்தை போதையில் இயக்கி சாலை தடுப்பில் மோதல்

 

* நடுவழியில் நிறுத்திவிட்டு ஓட்டம்
* டிரைவர் அதிரடி சஸ்பெண்ட்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம், பானையங்கால் கிராமத்தை சேர்ந்தவர் எழிலரசன் (47). கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனை-2ல் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து 52 பயணிகளுடன் பெங்களூருக்கு எழிலரசன் பேருந்தை ஓட்டிச் சென்றார். நடத்துநராக அருள்தாஸ் இருந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் சென்றபோது டூவீலர் மீது மோதி சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையின் மேல் ஏறி பேருந்து இறங்கி, தொடர்ந்து அதிவேகமாக சென்றுள்ளது. இதனால் பயணிகள் அச்சமடைந்து பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ஓட்டுநர் நிறுத்தாமல் தொடர்ந்து அதிவேகமாக இயக்கியதால் பயணிகள் கூச்சலிட்டனர்.

இதையடுத்து கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமாந்தூர் கிராம பகுதியில் பேருந்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு, ஓட்டுநர் எழிலரசன் இறங்கி தப்பியோடியுள்ளார். இதனால் பயணிகள் பாதி வழியில் தவித்தனர். தகவலறிந்து கள்ளக்குறிச்சி போலீசார் வந்து விசாரித்தனர். விபத்தில் சேதமடைந்த நிலையில் பேருந்து இருந்ததை பார்த்து, போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு, 52 பயணிகளையும் பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர் விசாரணையில், ஓட்டுநர் எழிலரசன் போதையில் இருந்ததும், இதனால் பேருந்தை தாறுமாறாக ஓட்டியதும் தெரியவந்தது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனை-2 கிளை மேலாளர் குணசேகரன், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஜெயசங்கருக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர், போதையில் பேருந்தை இயக்கி பாதி வழியில் நிறுத்திவிட்டு ஓடிய ஓட்டுநர் எழிலரசனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : Kallakurichi ,Bangalore ,Ezhilarasan ,Panayangal village ,Thiagathurugam, Kallakurichi district ,Kallakurichi Government Transport Workshop-2 ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...