×

வேலூர் மாவட்டத்தில் தொடரும் திருட்டால் 34 போலீஸ் குழுவினர் லாட்ஜ்களில் திடீர் ரெய்டு குற்றவாளிகளை பிடிக்க எஸ்பி நடவடிக்கை

வேலூர், டிச.9: வேலூர் மாவட்டத்தில் தொடரும் திருட்டால் எஸ்பி உத்தரவின்பேரில் 34 போலீஸ் குழுவினர் நேற்று லாட்ஜ்களில் திடீர் ரெய்டு நடத்தினர்.  வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, வேலூர், சத்துவாச்சாரி, குடியாத்தம் உட்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு மாதத்தில் வீடு புகுந்து திருடுவது, வழிப்பறி, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது போன்ற குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதில் வேலூரில் பிரியாணிக்கடை உரிமையாளர் வீட்டில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 250 சவரன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இப்படி தொடர்ந்து மாவட்டம் முழுவதும் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்தது. இதில் பிரியாணிக்கடை உரிமையாளர் வீட்டில் திருடியது ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பிடிபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே வேலூர் மாவட்ட எஸ்பி செல்வகுமார் உத்தரவின்பேரில், நேற்று மாவட்டத்தில் உள்ள லாட்ஜ்களில் வெளிமாநிலம், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனரா? எத்தனை நாட்களாக தங்கியுள்ளனர், என்ன காரணத்திற்காக தங்கியுள்ளனர். குற்றசம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் யாரேனும் உள்ளனரா? என்று லாட்ஜ்களில் ஒவ்வொரு அறையாக சென்று எஸ்ஐ உட்பட 5 பேர் கொண்ட 34 போலீஸ் குழுவினர் தீவிர சோதனை நடத்தினர். இதில் சந்தேகப்படும்படியான நபர்கள் சிலரை போலீசார், காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றசம்பவங்களை தடுக்க லாட்ஜ்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கியுள்ளனரா? என்று எஸ்பி உத்தரவின்பேரில் ரெய்டு நடத்தப்பட்டது’ என்றனர்.

Tags : SP ,police personnel ,raids ,lodges ,Vellore district ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்