பாரத் பந்த் ஆதரவாக வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 40 பேர் கைது இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை

வேலூர், டிச.9: வேலூரில் பாரத் பந்த் ஆதரவாக மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர். மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்திய வரும் விவசாயிகள் நேற்று நாடு தழுவிய பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்தனர்.அதன்படி, வேலூர் மாவட்டத்தில் பந்த் ஆதரவாக வேலூர் அண்ணா சாலையில், மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 40 பேரை போலீசார் கைது செய்து, மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அதைதொடர்ந்து, வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பாக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டத்தில் பந்த் பெரிய அளவில் இல்லை. வழக்கம்போல பஸ்கள், ஆட்டோ, கார் ஓடியது. அதேபோல், கடைகள், வணிக வளாகங்கள் இயங்கியது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை. பந்த் காரணமாக நேற்று மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: