×

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக, தோழமை கட்சியினர் மறியல்: 1000 பேர் கைது திருச்சியில் ேக.என்.நேரு தலைமையில் நடந்தது

திருச்சி, டிச. 8: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று மாவட்டம் முழுவதும் திமுக உள்ளிட்ட தோழமை கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 60 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. திருச்சியில் ரங்கத்தில் சட்டி ஏந்தியும், தூக்கு கயிறை கழுத்தில் மாட்டியும் மறியல் செய்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சியினர், விவசாயிகள் 68 பேர் கைதாகினர். மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி ஆகியோர் தலைமையில் மறியல் செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் தர், மாவட்ட செயலாளர் ராஜா தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில குழு உறுப்பினர் இந்திரஜித், மக்கள் அதிகாரம் செழியன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஜவஹர், வடக்கு மாவட்ட தலைவர் கலை ஆகியோர் தலைமையிலும், அகில இந்தி பார்வார்டு பிளாக் கட்சி சார்பில் தனித்தனியாக வந்து மறியல் செய்தனர்.

மறியலில் ஈடுபட்ட 400 பேர் கைது செய்யப்பட்டனர். சோமரசம்பேட்டையில் பைக் பேரணியாக வந்த தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை கைது செய்யப்பட்டார். திருவெறும்பூர்: திருவெறும்பூர் கடைவீதியில் முன்னாள் எம்எல்ஏ லாசர் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் செய்தனர். இதில் 20 பெண்கள் உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர். மறியலின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாய அணி மாநகர மாவட்ட அமைப்பாளர் பழனிவேல் இடது கையில் தீ வைத்து கொளுத்திக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மக்கள் நீதிமய்யத்தினர் ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில், மலைஆனந்தன் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முசிறி: முசிறியில் நடந்த போராட்டத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் சிவகுமார், மார்க்சிஸ்ட் கம்யூ ஒன்றிய செயலாளர் நல்லுசாமி மற்றும் தோழமை கட்சியினர் சுரேஷ், நல்லந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் திருச்சி-நாமக்கல் சாலையில் மறியல் செய்தனர். இதில் 64 பேர் கைது செய்யப்பட்டனர். தொட்டியம் வாணபட்டறை மைதானத்தில் திமுக கம்யூனிஸ்ட், காங்கிரஸ் விவசாய சங்கங்கள் சார்பில் மறியல் செய்த 36 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் தாபேட்டை கடைவீதியில் நடந்த மறியலில் 36 பேர் கைதாயினர். லால்குடி: லால்குடியில் திமுக எம்எல்ஏ சவுந்திரபாண்டியன் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர் துரைமாணிக்கம், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், இந்திய கம்யூ. நகர செயலாளர் பசுபதி, காங். ஒன்றிய தலைவர் சுகுமார், விசி உட்பட தோழமை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புள்ளம்பாடி ஒன்றியத்தில் ஒன்றிய சேர்மன் ரஷ்யா, திமுக நகர செயலாளர் முத்துக்குமார் வியாபாரிகள் சங்க தலைவர் ரங்கராஜன், காங்கிரஸ் நகர தலைவர் நடராஜன் உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூ. மாவட்ட செயலாளர் ஜெயசீலன் தலைமையில் திருச்சி-அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். துறையூர்: துறையூர் பஸ் நிலையம் முன் எம்எல்ஏ., ஸ்டாலின் குமார் தலைமையில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் முரளி, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை முன்னிலையில் மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல உப்பிலியபுரத்தில் ஒன்றிய செயலாளர் முத்துசெல்வன் தலைமையில், மாவட்ட கவுன்சிலர் தீபா சின்ராஜ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம், மறியல் நடந்தது. இதில் 110 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags : DMK ,Delhi ,KN Nehru ,Trichy ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு