×

உத்தமர்சீலி அருகே கோயில் விழாவில் தகராறு 3 பேருக்கு அரிவாள் வெட்டு

மண்ணச்சநல்லூர், டிச.9: திருச்சி அடுத்த உத்தமர்சீலி அருகே கிளிக்கூடு கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் அசோக்குமார்(35). பாண்டியன் சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் நேற்று முன்தினம் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில் பாண்டியனுக்கு பதிலாக அவரது மகன் அசோக்குமாருக்கு கோயில் சார்பாக முதல்மரியாதை வழங்கப்பட்டது. அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பாண்டியனின் சகோதரர் மதியழகனின் மகன் ஆனந்த்(30), தனது தந்தைக்கு முதல்மரியாதை வழங்கும்படி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரை கிராம மக்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கோயில் பூஜைகள் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் அசோக்குமார் அவரது உறவினர்கள் கண்ணன்(29), லோகநாதன்(35) ஆகியோர் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஆனந்த், மதியழகன் மற்றும் இவர்களின் ஆதரவாளர்கள் வேலு(30), பிரகாஷ்(20) ஆகிய 4 பேரும் அசோக்குமார் உள்ளிட்ட 3 பேரை சரமாரியாக தாக்கியதுடன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்து 3 பேரும் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்தனர். இதனையடுத்து ஆனந்த் உள்ளிட்ட 4 பேரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி தலைமறைவாயினர். இந்த சம்பவத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் பலத்த காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த கொள்ளிடம் நெ.1 டோல்கேட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Uttamarseeli ,temple ceremony ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...