திருச்சி, ஆக.18: திருச்சியில் கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் ஆக.16ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருச்சி திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்றதாக ராம்ஜி நகரை சேர்ந்த சுமார் 60 வயது மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியில் கஞ்சா விற்றதாக முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த ஹரி பிரசாத்(23) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
