நாமகிரிப்பேட்டை, ஆக.18: நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலா அருகேயுள்ள ராஜாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் மணிகண்டன்(35). விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக அப்பகுதியினர் நாமக்கல் எஸ்பி விமலாவிற்கு ரகசிய தகவல் அளித்தனர். இதையடுத்து, எஸ்பி உத்தரவின்பேரில், ஆயில்பட்டி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அனந்தகுமார் மற்றும் எஸ்ஐக்கள் சிவா, மணிகண்டன் ஆகியோர் தோட்டத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது அங்கு மணிகண்டன் 2 பேரல்களில் சாராயம் காய்ச்சி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் 100 லிட்டர் சாராய ஊறல் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சாராய ஊறல்களை போலீசார் அளித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த ஆயில்பட்டி போலீசார் கள்ள சாராயம் காய்ச்சிய மணிகண்டனை கைது செய்து ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நாமக்கல் சிறையில் அடைத்தனர்.

