பேய்க்கரும்பன்கோட்டையில் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் குடிநீர் தேக்க தொட்டி சிமென்ட் காரைகள் பெயர்ந்தது

ஒரத்தநாடு, டிச. 9: ஒரத்தநாடு பேய்க்கரும்பன்கோட்டையில் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் குடிநீர் தேக்க தொட்டி உள்ளதால் மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். ஒரத்தநாடு தாலுகா பேய்க்கரும்பன்கோட்டையில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வரும் தண்ணீரை 400க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நீர்த்தேக்க தொட்டியை போதுமான பராமரிப்பு செய்யாததால் தொட்டியின் 4 தூண்களும் துருப்பிடித்து சிமென்ட் காரைகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது பலத்த மழை பெய்து வரும் நிலையில் நீர்த்தேக்க தொட்டியின் அருகில் வசித்து வருபவர்கள் அச்சத்துடன் உள்ளனர்.

மாதம்தோறும் நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும். மேலே ஏறுவதற்கு வைக்கப்பட்ட ஏணியும் துருப்பிடித்து உடைந்துள்ளதால் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய முடியாமல் உள்ளது. இதனால் பாசிகள் படர்ந்து சுகாதாரமற்ற நீரை பொதுமக்கள் பயன்படுத்து நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பவர், நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு வேறு இடத்தில் புதிய நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டுமென 4 முறை கலெக்டரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பலத்த மழை, காற்று அடித்து வரும் நிலையில் பழைய நீர்த்தேக்க தொட்டியை அகற்றி விட்டு புதிய நீர்த்தேக்க தொட்டியை கட்டுத்தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>