- இந்தியா
- பாஜக
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சேலம்
- ஒன்றிய பிஜேபி ஊராட்சி
- தர்மபுரி
- கவர்னர்
- திமுக
- தர்மபுரி மாவட்டம்
- தடங்கம்…
சேலம்: ஆளுநர் மூலம் இழிவான அரசியல் செய்கிறது ஒன்றிய பாஜ அரசு. திமுக ஆட்சியின் மீது அவதூறு பரப்புவது தான் ஆளுநரின் ஒரே வேலை என தர்மபுரியில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தர்மபுரி மாவட்டம், தடங்கத்தில் நேற்று நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.512.52 கோடி மதிப்பிலான 1044 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.362.77 கோடி மதிப்பிலான 1073 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 70,427 பயனாளிகளுக்கு ரூ.830.06 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு, முதல்முறையாக ஒரு முக்கியமான திட்டத்தை வேளாண் பெருங்குடி மக்களுக்காக தொடங்கி வைத்து வந்துள்ளேன். விவசாயிகள் பயிர்க்கடன் பெற தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் நேரடியாக சென்று விண்ணப்பித்தால், ஒருவாரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனை மாற்றி விவசாயிகளின் நலன் கருதி, காலதாமதம் ஆவதை தவிர்க்க கூட்டுறவு வங்கிகளுக்கு போகாமல் வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் மூலமாக பயிர்க்கடனுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையும், விண்ணப்பித்த அன்றே விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு பயிர்க்கடன் நேரடியாக வழங்கிடும் நடைமுறையும் இன்று(நேற்று) தர்மபுரியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தர்மபுரியின் வளர்ச்சி என்றாலே, அது திமுகவின் ஆட்சியில் தான். அந்த அளவிற்கு ஏராளமான திட்டங்கள் நமது ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு எடுத்துக்காட்டு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, கடந்த 2008ல் தலைவர் கலைஞர் உருவாக்கிய திட்டம். அன்றைய உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த என்னுடைய மேற்பார்வையில் நடந்தது. 3 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 7,619 ஊரக குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு குடிநீர் வழங்க இந்த திட்டத்தை ரூ.1,929 கோடியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் செயல்படுத்தினோம். இந்த திட்டத்தின் 2ம் கட்ட பணிகளை, நமது திராவிட மாடல் ஆட்சியில் ரூ.7,890 கோடி செலவில் செய்து வருகிறோம்.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் ரூ.447.26 கோடியில், 43,86,926 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியின், ஒவ்வொரு தனிமனித எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது. சொன்னதை செய்வோம், செய்வதை தான் சொல்வோம் என தலைவர் கலைஞர் காட்டிய வழியில், உழைத்து வருகிறோம். அதனால் தான் சொல்கிறோம். நாட்டின் அத்தனை வளர்ச்சித் திட்டங்களுக்கும் தமிழ்நாடுதான் முன்னோடி.
திராவிட மாடல்தான் இந்தியாவுக்கான திசை காட்டி. இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான், ஆட்சிக்கு எதிராக சில விஷமிகள் அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டு இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் சொல்வதை பற்றி நான் கவலைப்படவில்லை. அதுதான் அவர்களின் அரசியல். அவர்களை விடவும் மலிவான அரசியல் செய்கிறார் ஒருவர். அவர்தான் ஒன்றிய பாஜ அரசு நியமித்திருக்கும் நம்முடைய ஆளுநர். ஆளுநர் மாளிகையில இருக்கும் அவர் செய்யும் ஒரே வேலை, திமுக ஆட்சி மேல் அவதூறு பரப்புவது தான். திமுக மேல் அவதூறு பரப்புவார், திராவிடத்தை பழிப்பார்.
சட்டங்களுக்கு ஒப்புதல் தரமாட்டார். இல்லாத திருக்குறளை அச்சிட்டு கொடுப்பார். தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பார். நம் தமிழ்நாட்டு மாணவர்களை இழிவுபடுத்துவார். தமிழ்நாட்டின் கல்வி, சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு பற்றியெல்லாம் உண்மைக்குப் புறம்பாக, இல்லாதது பொல்லாததை சொல்லி, பீதியை கிளப்ப முயற்சி செய்வார். இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. அதற்கு ஒன்றிய பாஜ அரசு வெளியிடுகிற புள்ளி விவரங்களே சாட்சி.
இந்தியாவில் பாஜ ஆளும் மாநிலங்களை விட, தமிழ்நாடு எல்லா விதத்திலும் மிகச் சிறந்த மாநிலமாக இருக்கிறது. அந்த எரிச்சலில், தன்னுடைய கோபத்தை புலம்பலாக பொதுமேடைகளில் கொட்டித் தீர்க்கிறார். பள்ளிக் கல்வியில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிறோம். தமிழ்நாடு அமைதியான மாநிலமாக இருப்பதால் தான், இந்த 4 ஆண்டு காலத்தில், ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை நாம் ஈர்த்திருக்கிறோம். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையாம். ஆளுநர் கண்டுபிடித்திருக்கிறார்.
பணிபுரியும் பெண்களுக்காக அனைத்து வசதிகளும், பாதுகாப்பும் கொண்ட தோழி விடுதிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ம் ஆண்டு அறிக்கைப்படி, இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் மாநிலங்களில் பாஜ ஆளும் உத்தர பிரதேசம்தான் முதலிடத்தில் இருக்கிறது. அதனால், ஆளுநர் கம்பு சுத்த வேண்டியது பாஜ ஆளும் மாநிலங்களில் தானே தவிர, தமிழ்நாட்டில் இல்லை.
தொடர்ந்து தமிழுக்கு எதிராக, தமிழ்நாட்டுக்கு எதிராக, தமிழர்களோட உணர்வுகளுக்கு எதிராக பேசி வரும் ஆளுநரை வைத்து, தன்னோட இழிவான அரசியலை ஒன்றிய பாஜ அரசு செய்கிறது. அவர் தொடர்ந்து தமிழ்நாட்டுல இருக்க வேண்டும். அவர் இருப்பதுதான் நமக்கு நல்லது என்று ஆரம்பத்தில் இருந்தே நானும் சொல்லி கொண்டு வருகிறேன். என்னைப் பொறுத்தவரை, நமக்குள் இருக்கிற மொழி உணர்வை, இன உணர்வை, திராவிட இயக்கக் கொள்கை உணர்வை பட்டுப்போக விடாமல், கொள்கை நெருப்பு அணையாமல் பார்த்துக்கிற வேலையை ஆளுநர் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்.
அவர் பேசுவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என்னோட நோக்கம் எல்லாம் மக்களாகிய உங்களைப் பற்றி தான். வாக்களித்த உங்களுக்கு உண்மையாக இருக்கணும் என்பது மட்டும்தான் என்னோட ஒரே சிந்தனை. இந்த இரண்டு வாரங்களுக்குள் 3 முக்கியமான திட்டங்களைத் தொடங்கி வைத்திருக்கேன். உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், தாயுமானவர் திட்டம் ஆகிய திட்டங்களை பற்றி நான் அதிகம் விவரிக்கவே தேவையில்லை. பயன்பெற்று வரும் நீங்களே அந்த திட்டங்களுக்கு தூதராக மாறி விட்டீர்கள்.
அரசுத்துறை சேவைகளில் பொதுமக்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றி தருகிறது உங்களுடன் ஸ்டாலின். இதுவரை 3,561 முகாம்களில், நம்முடைய அரசு மேல் முழு நம்பிக்கையோடு 3,41,395 பேர் தங்களுடைய கோரிக்கை மனுக்களைக் கொடுத்திருக்கிறார்கள். நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 74 முகாம்கள் மூலமாக இதுவரை 92,841 பேர் பயனடைந்திருக்கிறார்கள். தாயுமானவர் திட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களுடைய வீடுகளுக்கே நேரடியாக சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்படுகிறது.
இப்படி 21 லட்சம் குடும்பங்களுக்கு அரசே அத்தியாவசிய பொருட்களை கொண்டு போய் கொடுக்கிறது. வயதானவர்கள் ரேசன் கடைக்கு வரத் தேவையில்லை, வரிசையில் நிற்கத் தேவையில்லை. பொருட்களை வீடு வரை கஷ்டப்பட்டு தூக்கி கொண்டு போகத் தேவையில்லை. இவை எல்லாவற்றையும் அரசே செய்து தருகிறது. இதன் மூலமாக, அரசுக்கு ரூ.30 கோடி கூடுதல் செலவானாலும், அதை நாங்கள் செலவாக கருதவில்லை. அரசோட கடமையாக தான் நினைக்கிறோம். வீட்டுக்கே பொருள் வந்து சேர்ந்ததும், அந்த முதியோர்கள் கொடுத்துட்டு வரும் பேட்டிகளை எல்லாம், ஊடகங்களில் நான் பார்த்தேன்.
உணர்ச்சி பெருக்குடன், நா தழுதழுக்க அவர்கள் தரும் பேட்டிகளைப் பார்க்கும் போது, நானும் அதிகம் உணர்ச்சி வசப்பட்டேன். நான் முதலமைச்சரானதோட நோக்கம், நிறைவேறி கொண்டு இருக்கிறதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். மனநிறைவை அடைந்தேன். அடுத்து அமையப் போவதும், உங்களுடைய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி தான். திராவிட மாடல் 2.0 ஆட்சி, இந்தியாலயே அனைத்துத் துறையிலும் வளர்ந்த மாநிலமா தமிழ்நாட்டை உயர்த்தும். இந்தியாவிலேயே எல்லா வளர்ச்சிக் குறியீடுகளிலும் முதன்மை மாநிலமாக வளர்த்தெடுக்கும்.
உங்க எல்லாருடைய கோரிக்கைகளையும் நிறைவேத்தும் ஆட்சியாக இருக்கும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். விழாவில், அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், கேஆர்.பெரியகருப்பன், ராஜேந்திரன், எம்பி ஆ.மணி, எம்எல்ஏ வெங்கடேஷ்வரன், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் நந்தகுமார், கலெக்டர் சதீஷ், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
* விடியல் பயணம் மூலம் மகளிர் ரூ.50 ஆயிரம் சேமிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கடந்த 2021 தேர்தலுக்கு முன்பு, விடியல் பயண திட்டம் குறித்த வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் சொன்னோம். உடனே நமக்கு எதிரானவர்கள், இது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி, இதனால் பேருந்துகளை குறைத்துவிடுவார்கள், கட்டணத்தை உயர்த்திவிடுவார்கள் என தங்களது இஷ்டத்திற்கு கதை, திரைக்கதை, வசனங்களை எல்லாம் எழுத தொடங்கினார்கள்.
ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் நிதிநிலைமையை பாழ்படுத்தியதையும் மீறி, சொன்ன மாதிரி ஆட்சி பொறுப்பேற்ற அன்றே, விடியல் பயணம் திட்டத்திற்கு கையெழுத்து போட்ட கை தான், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் கை. இந்த திட்டத்திற்கு ஆகும் பணத்தை செலவாக பார்க்காமல், பெண்களுக்கு சேமிப்பாக, மகளிர் முன்னேற்றத்திற்கான முதலீடாக தான் நாங்கள் நினைத்தோம்.
இதன் பலன் சமூகத்தில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மாதமும் சுமார் ஆயிரம் ரூபாய், நாம் ஆட்சிக்கு வந்த இந்த 51 மாதங்களில், ஒவ்வொரு மகளிரும் ரூ.50 ஆயிரம் சேமித்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய புரட்சி இது. யாராலயும் மாற்ற முடியாத, மறுக்கமுடியாத சாதனை இது. அதனால் தான், இந்த விடியல் பயணம் திட்டத்தை, கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் நடைமுறைப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்’’ என்றார்.
* தர்மபுரி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகள்
விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தர்மபுரி மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
* சித்தேரி ஊராட்சியில் உள்ள 63 மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களும், உலகம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வாழும் பொதுமக்களும், பல்வேறு பணிகளுக்கு பாப்பிரெட்டிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்திற்கு செல்லக்கூடிய தூரம் அதிகமாக உள்ளது. எனவே, இக்கிராமங்கள் அனைத்தும் அருகில் இருக்கும் அரூர் வருவாய் வட்டத்துடன் இணைக்கப்படும்.
* ஒகேனக்கல்-தர்மபுரியை இணைக்கும் மாவட்ட நெடுஞ்சாலையில், தர்மபுரியில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி முதல் பென்னாகரம் வரை உள்ள, 25 கிமீ நீளமுள்ள சாலைப்பகுதி, 4 வழித்தடமாக ரூ.165 கோடி மதிப்பில் 2 கட்டமாக மேம்படுத்தப்படும்.
* நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பரிகம் ஊராட்சியில், பரிகம் முதல் மலையூர் வரை உள்ள வனச்சாலை, ரூ.10 கோடியில் தார்சாலையாக மேம்படுத்தப்படும்.
* நல்லம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ரூ.7.50 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படும்.
* அதிக அளவில் புளி உற்பத்தி செய்யும் தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், ரூ.11.30 கோடியில் ஒருங்கிணைந்த புளி வணிக மையம் அமைக்கப்படும்.
* அரூர் நகராட்சியில் வாழும் மக்களின் நலன்கருதி, வள்ளிமதுரை குடிநீர் வழங்கும் திட்டம் புதிய குழாய்களை புதுப்பித்தும், அதனை பதித்தும், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தீர்த்தேக்க தொட்டி அமைத்தும், ரூ.15 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
* இந்தியாவிலேயே முதன்முறையாக இணைய வழி பயிர்க்கடன் திட்டம்
தர்மபுரி அதியமான்கோட்டையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு துறை சார்பில், விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே, இணைய வழி பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது, விவசாயிகள் பயிர்க்கடன் வாங்க கூட்டுறவு வங்கிக்கு நேரில் வரவேண்டியுள்ளது. விண்ணப்பித்து 7வது நாளில் கடன் வழங்கப்படும்.
ஆனால், இந்த திட்டத்தின் மூலம் இனி மின்னணு விவசாய கடன்(கிசான் கிரடிட் கார்டு)திட்டத்தில் விண்ணப்பித்த அன்றே கடன் வழங்கப்படுகிறது. அதுவும் கூட்டுறவு வங்கிக்கு செல்ல வேண்டியதில்லை. இ-சேவை மையத்தில் இருந்து கூட்டுறவு வங்கிக்கு விண்ணப்பித்தால் போதும். விவசாயியின் வங்கி கணக்கில் பயிர்க்கடன் அன்றே சேர்ந்து விடும். இந்த திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக தர்மபுரியில் முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை விவசாயிகள் கடன் பெறலாம்.
