திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், கடந்த ஜூன் 27ம் தேதி நிகிதா என்பவர் கொடுத்த புகாரில், தனிப்படை போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். இதுதொடர்பாக கொலை வழக்கு பதிந்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஜூலை 12ம் தேதியிலிருந்து சுமார் 27 சாட்சிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் 3 பேர் மடப்புரம் கோயில் வளாகத்திற்கு நேற்று வந்து, அஜித்குமாரின் தம்பி நவீன்குமாரை அழைத்து மீண்டும் விசாரித்தனர். அவரிடம் அஜித்குமாரின் மருத்துவ அறிக்கை தொடர்பாக சில சந்தேகங்களை சிபிஐ அதிகாரிகள் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து திருப்புவனம் காவல்நிலையம் சென்றனர். அங்கு ஒரு சில காவலர்கள் மட்டுமே இருந்ததால் சற்று நேரத்தில் புறப்பட்டு விட்டனர். இதனைத்தொடர்ந்து அஜித்குமாரின் தாயார் மாலதியிடம் மீண்டும் விசாரணை நடத்தினர். காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை, ஐகோர்ட் மதுரைக்கிளையில் வரும் 20ம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
