×

பல மாதங்களுக்கு பிறகு அமராவதி ஆற்றில் கரை புரண்டு ஓடும் தண்ணீர் கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

கரூர், டிச. 9: பல மாதங்களுக்கு பிறகு கரூர் அமராவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மக்கள் ஆற்றுப்பாலங்களில் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்து வருகின்றனர். அமராவதி அணையை சுற்றிலும் உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாகவும், திண்டுக்கல் மாவட்டப்பகுதியில் உள்ள குதிரையாறு, பாலாறு போன்ற பல்வேறு சிற்றாறுகளின் தண்ணீர் அனைத்தும் ஒன்றிணைந்து அமராவதி ஆற்றில் 17,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும், பிற சிற்றாறுகளின் தண்ணீர் அணைத்தும் தற்போது கரூர் நகரின் வழியாக செல்லும் அமராவதி ஆற்றில் திருமுக்கூடலூர் நோக்கி சென்று வருகிறது. ஒரு ஆண்டுக்கு பிறகு அமராவதி ஆற்றை மறைக்கும் அளவுக்கு தற்போது தண்ணீர் சென்று வருவதால் லைட்ஹவுஸ் மற்றும் சுக்காலியூர் பகுதிகளில் உள்ள அமராவதி மேம்பாலங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் வந்து வேடிக்கை பார்த்த வண்ணம் உள்ளனர்.

இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தற்போது பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வருகின்றன. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணையில் இருந்து 4,450 கன அடியும், திண்டுக்கல் மாவட்டம் குதிரையாறு அணையில் இருந்து 400 கன அடியும், பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து 4995 கன அடியும், வரதமாநதியில் இருநது 3,995 கன அடியும் என மொத்தம் 16, 840 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீருடன் மழைநீரும் சேர்ந்து 17,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

எனவே கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றின் கரையோரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். தாழ்வான பகுதிகளில் யாரும் இருக்க வேண்டாம். ஆற்றில் குளிப்பதையோ, துணி துவைப்பதையோ, செல்பி புகைப்படங்கள் எடுப்பதையோ தவிர்க்க வேண்டும். ஆற்றின் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம். பாதுகாப்பாக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதிகளில் வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களை அருகில் உள்ள சமுதாயக் கூடங்கள், பள்ளிகள், திருமண மண்டபங்கள் போன்ற பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது குறித்த தகவலை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags : Collector ,Amravati ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...