சென்னை: சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் மற்றும் குற்றங்களுக்கு வழிவகுக்கும் ரீல்ஸ்களை தடுக்க கோரி இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் எழுத உள்ளது. காவல்துறையினர் நீண்டகாலமாகவே சமூக வலைதளங்களில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்கள் வரைமுறையின்றி இருப்பதால், அவை குற்றங்களுக்கு வழிவகுக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். பேஸ்புக் நிறுவனம் ஏஐ தொழில்நுட்பம் மூலம் வன்முறையை தூண்டும் பதிவுகள், புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தானியங்கி முறையில் தணிக்கை செய்யும் வசதியை கொண்டுள்ளது.
ஆனால், அதே நிறுவனமான மெட்டாவால் நிர்வகிக்கப்படும் இன்ஸ்டாகிராமில் இந்த வரைமுறை இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக, அரிவாளை வைத்து எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்கள், சட்டவிரோத பைக் ரேசிங் வீடியோக்கள், மற்றவர்களை சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தூண்டும் உள்ளடக்கங்கள், வன்முறையை ஊக்குவிக்கும் செயல்பாடுகள் இந்த வகையான குற்றங்களை இன்ஸ்டாகிராமில் தூண்டும் உள்ளடக்கங்கள் பதிவேற்றப்படுவதாக காவல்துறை வேதனை தெரிவித்துள்ளது. இதனால் இதை பார்ப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில், குற்றங்களை தூண்டும் வகையிலான பொழுதுபோக்கு அம்சங்கள் என்ற பெயரில் பதிவேற்றப்படும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு கடிதம் எழுத சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளது. அதாவது, பேஸ்புக்கில் உள்ள ஏஐ அடிப்படையிலான தணிக்கை முறையை இன்ஸ்டாகிராமிலும் அமல்படுத்த வேண்டும் என்று காவல்துறை கோரிக்கை விடுக்க உள்ளது. இந்த நடவடிக்கை குற்றங்கள் நடப்பதை குறைக்கும் முக்கிய படியாக இருக்கும்.
