நாமக்கல்: நாமக்கல்லில் தனியார் மருத்துவமனையில் பெயின்ட் அடிக்கும் பணியின்போது 60 அடி உயரத்தில் இருந்து கிரேன் சரிந்து மின்கம்பி மீது விழுந்ததில் 3 தொழிலாளர்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். நாமக்கல்- திருச்சி ரோட்டில் உள்ள நாகராஜபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக பெயின்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை எருமப்பட்டியைச் சேர்ந்த தனபால் என்பவர் கான்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை எருமப்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சுகுமார்(45), ஜோதி(44) மற்றும் நாமக்கல் கொசவம்பட்டியைச் சேர்ந்த முகேஷ்கண்ணன்(26) ஆகியோர் மருத்துவமனையில் பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 4வது மாடியில் பெயின்ட் அடிப்பதற்காக கிரேனை பயன்படுத்தியுள்ளனர். மைக்கேல் ஜீடே என்பவர் கிரேனை இயக்கினார்.
திடீரென கட்டுப்பாட்டை இழந்த கிரேன், 60அடி உயரத்தில் இருந்து கீழே சரிந்து அந்த வழியாக செல்லும் உயரழுத்த மின்கம்பி மீது விழுந்தது. இதில் கிரேன் தொட்டியிலிருந்த 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், சுகுமார், ஜோதி ஆகியோர் சம்பவவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த முகேஷ்கண்ணனை அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் இறந்தார். கிரேன் சரிந்து விழுந்தபோது, அங்கு நிறுத்தி இருந்த காரும் சிக்கி நொறுங்கியது. மேலும், அங்கிருந்த ஒரு மின் கம்பமும் முறிந்து விழுந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
