×

நாச்சியார் கோயில் கல்கருட சேவை

“பறவை ஏறும் பரம புருடா, நீ என்னைக் கைகொண்டபின், பிறவி என்னும் கடலும் வற்றி பெரும்பதமாகின்றதால்’’ என்பது கருடன் மீது பெருமாள் வரும் காட்சியை தரிசித்த பெரியாழ்வாரின் பாசுரம். கருடப்பெருமான் நித்யசூரிகளில் ஒருவர். அவரை வணங்குவோர்க்குச் சகல நன்மைகளும் கிடைக்கும். அவரை வேதம் என்றும், அவர் மீது அமர்ந்த பெருமாளை வேதத்தின் பொருள் என்றும் கூறும் மரபு உண்டு. அதனால், கருடசேவையை தரிசித்தால் வேதத்தையும் வேதத்தின் பொருளையும் ஒருசேர தரிசித்தது போல் ஆகும்.

அதனால்தான், எங்கு கருடசேவை நடந்தாலும் மக்கள் அங்கே அலைகடல் எனத் திரள்கிறார்கள். பெரு உற்சவம் என்று சொல்லப்படும் பிரம்மோற்சவத்தில் ஒரு நாள் கருட சேவை நிச்சயம் உண்டு.

கருடன் அழகிய இறக்கைகள்தான்
யஞ்ஜங்கள்.
கருடனின் கண்கள்தான் காயத்ரி மந்திரம்.
தோத்திர மந்திரங்கள்தான் அவனுடைய தலை.

சாம வேதம்தான் அவனுடைய உடல் என்று குறிக்கப்படுகிறது. கருடாழ்வாரைப் பெரிய திருவடி என்று அழைப்பார்கள். பெரும்பாலான வைணவக் கோயில்களில் நான்கு மூலைகளிலும் கருடன் காட்சியளிப்பார். அதுவும் எப்பொழுது வேண்டுமானாலும் பக்தர்களைக் காக்க வேண்டும் என்று பறப்பதற்குத் தயாரான கோலத்தில் காட்சி தருவார். ஸ்ரீமன் நாராயணனின் வாகனம் மட்டுமல்ல, கொடியாகவும் அவர் விளங்குகின்றார். கருடனை வணங்கிவிட்டு அல்லது மனதில் தியானித்துவிட்டு ஒரு காரியத்திற்குச் சென்றால் அந்தக் காரியம் வெற்றி ஆகிவிடும்.

‘ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸூவர்ண பட்சாய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்

இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, கருடனை வழிபடுபவர்களுக்கு, விஷ ஜந்து களால் ஆபத்து நேராது. தத்துவ அறிவு உண்டாகும். பகை விலகும். ஆபத்து அகலும். நல்ல காரியங்கள் நடந்தேறும். கருட தரிசனம் சுப சகுனம் என்பதால், கோயில் குடமுழுக்கு நேரத்தில் எங்கிருந்தோ கருடன் வந்து வட்டமிடுவார். கருட தரிசனத்தைக் கண்டால் வாழ்வில் வெளிச்சம் கிடைக்கும் என்பதற்காகவே, இன்றைக்கும் கருட தரிசனம் காண்பதற்காக ஒவ்வொரு ஊரிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மக்கள் திரளாகக் கூடியிருப்பதைக் காணலாம்.

ஒரு பிரயாணத்திற்குப் புறப்படும்போது, வானத்தில் கருடன் வட்டமிட்டால் அதைவிட சிறந்த சகுனம் வேறு இல்லை. அதைப் போலவே, கருடனுடைய குரல் கேட்பது சுப சகுனமாகக் கருதப்படுகிறது. ராகங்களில் கருட த்வனி என்ற ராகம் உண்டு. கருட தரிசனம் பாப விமோசனம். கருடன் பல தலங்களில் எழுந்தருளி யிருந்தாலும், பிரதானமாக இருக்கக்கூடிய தலங்களில் ஒன்று கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாச்சியார்கோயில். அங்கேகல் கருட சேவை’ மிகவும்
விசேஷம். அவருக்கு தனி சந்நதியே உண்டு. `திரு நறையூர்’ என்று இந்த திவ்ய தேசத்திற்கு பெயர்.

கோச்செங்கணான் என்கின்ற சோழமன்னன் சிவபெருமானுக்கு 70 ஆலயங்களைக்கட்டினான். பெருமாளுக்கு அவன் கட்டியது திருநறையூர் நாச்சியார்கோயில் மட்டும். இது ஒரு மாடக்கோயில். நீங்கள் வீதியிலிருந்து நேராகப் பெருமாளைத் தரிசிக்கும்படியான அற்புத அமைப்பு ஐந்து அடுக்கு கொண்ட ராஜகோபுரம், பெருமாளுக்கு னிவாசன் என்கிற பெயர், நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருவார். வரம் தரும் முத்திரையுடன் வலது திருக்கையும், திருத்தொடையில் அமர்த்திய இடது திருக்கையும், சங்கு சக்கரம் ஏந்திய இருகைகளுடனும் விளங்குகிறார். தாயாரின் பெயர் வஞ்சுள வல்லி. மூலஸ்தானத்திலேயே பெருமாளும் தாயாரும் சேர்த்தியாகக் காட்சி அளிப்பது, வேறு எந்தத் தலத்திலும் பார்க்கமுடியாது.

மேதாவி மகரிஷியின் மகளாகப்பிறந்தவள் வஞ்சுளவல்லித் தாயார். இத்தலத்தில், தாயாருக்குத் தான் பிரதான்யம். வீதி உலாவிலும் தாயார் முன்னால் செல்ல, பெருமாள் பின்னால் செல்வார். கருவறைக்குக் கீழே மகா மண்டபத்தில், வடபுறம் தெற்கு நோக்கியுள்ள சந்நதியில் பட்சிராஜன், பெரியதிருவடி என்று அழைக்கப்படும் கருடன் எழுந்தருளியுள்ளார். மேதாவி மகரிஷியின் திருக்குமாரத்தியான வஞ்சுளவல்லித்தாயாருக்கும், பெருமாளுக்கும் திருக்கல்யாணத்தை முன்னிருந்து நடத்தி வைத்தவர் கருடாழ்வார்.

அப்படிப்பட்ட இத்தலத்தில், கல் கருடன் மீது ஆரோகணித்து பெருமாள் திருக்காட்சி தரும் கருட சேவை வேறு எந்த தலத்திலும் இல்லாதது. இங்கு கருடசேவை மிகவும் சிறப்பானது. ஆடிமாதத்தில் சுவாதி நட்சத்திர நாளில் கல் கருடனுக்குச் சிறப்பாக விழா நடைபெறுகிறது. மார்கழி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவக்காலத்தில், நான்காம் நாளன்று கல்கருடன் வீதிஉலா வருகிறார்.

பட்சிராஜன் என்ற பெயரோடு இங்குள்ள கல்கருடன் ஐந்தடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி கொடுக்கிறார். மற்ற கருடனுக்கு இல்லாத ஒன்பது நாமங்களுடன் காட்சி கொடுக்கிறார். பெருமாளுக்கு பூஜை ஆனதும், இவருக்கும் ஆறு கால வழிபாடு நடைபெறும். இவர் பெரிய வரபிரசாதி. ஏழு வாரங்கள் தொடர்ந்து இவரை வேண்டிக்கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் நினைத்த காரியம் நடக்கும். வியாழக்கிழமை தோறும் `அமுதக் கலசம்’ என்ற பிரத்யேக நைவேத்தியம் செய்யப்படுகிறது. இது, பயத்தம் பருப்புடன் வெல்லம், ஏலக்காய் கலந்து செய்யப்படும் இனிப்பு நைவேத்தியம்.

48 நாட்கள் கல் கருடனை வழிபட்டால், எல்லாவிதமான நோய்களும் விலகும். நினைத்த காரியம் நடக்கும். திருமணத் தடைகள் விலகும். சர்ப தோஷங்கள் தூள் தூளாகும். பங்குனி மாதத்தில் நடைபெறும் திருவிழாவில் இந்த கல்கருட சேவை மிக விசேஷமாக நடைபெறும். பங்குனி மாதத்தில் (பங்குனி உற்சவம் நான்காம் நாள்) நடைபெறும் பெரு விழாவில் சந்நதியிலிருந்து கருடனை நாலுபேர் பாதம் தாங்கி தூக்கி வருவார்கள். படிக்கட்டுகளிலிருந்து தூக்கி வரப்படும் கருடாழ்வாரை நீண்ட உருட்டு மரங்களில் கம்பி வளையத்திற்குள் செருகப்பட்டு பதினாறு பேர் சுமந்து வருவார்கள்.

இப்படி 32, பிறகு 64 பேர் கருடனைச் சுமந்து வருவார்கள். கோயிலுக்குத் திரும்பும் பொழுது இதே வரிசையில் சுமப்பவர்கள் குறைந்து கடைசியாக நான்குபேர் சுமந்து சந்நதியை அடைவார்கள். அற்புதமான இந்தக் கல்கருட சேவை திருவிழாவைக் காண, திரு நரையூர் செல்வோம். திருமாலின் பேரருளையும் கருட பகவானின் பேரருளையும் பெறுவோம்.

தொகுப்பு: முனைவர் ஸ்ரீராம்

The post நாச்சியார் கோயில் கல்கருட சேவை appeared first on Dinakaran.

Tags : Nachiyar Temple Kalkaruda Service ,Garuda ,Nachiyar Koil Kalkaruda Seva ,
× RELATED கருடன் கருணை