×

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான தமிழ்நாடு அரசின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 ஆக உயர்த்தப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளுக்கு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 8.45 மணிக்கு சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்த அணிவகுப்பில் சிறப்பு காவல் படைகள், கேரளா சிறப்பு காவல்படை, காவல் பெண் கமாண்டோக்கள் உள்ளிட்ட போலீசார் பங்கேற்கின்றனர்.

தொடர்ந்து, கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு மூவர்ண தேசியக்கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து உரையாற்றிவருகிறார்.

முதல்வர் கூறியதாவது:
நாட்டு மக்களுக்கு மனமார்ந்த விடுதலை நாள் வாழ்த்துகள். தமிழ்நாட்டை 5 முறை ஆட்சி செய்த கலைஞர் வழியில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. பட்டொளி வீசி பறக்கும் தேசிக் கொடியை நான் மட்டுமல்ல அனைத்து மாநில முதல்வர்களும் ஏற்றும் ஜனநாயக உரிமையை பெற்றுத் தந்தவர் கலைஞர். 5வது முறை தேசியக் கொடியை ஏற்றும் வாய்ப்பை பெற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். தேசியக் கொடி ஏற்றும் வாய்ப்பை கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.

நாட்டின் விடுதலைக்கு காரணமான சுதந்திர போராட்ட தியாகிகளைப் போற்றுவோம். நாடு முழுவதும் அனைத்து மாநில மக்களும் போராடி பெற்றதே விடுதலை. அனைத்து பண்பாடு, மொழி, இன, மத மக்களும் ஒன்றாக போராடி பெற்றதே விடுதலை. அனைவருக்குமான இந்தியாவாக நாடு எப்போதும் இருக்க வேண்டும் என்று தலைவர்கள் கனவு கண்டார்கள். தலைவர்களின் கனவை நிறைவேற்றுவதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி. தியாகிகளை பெயரளவில் நினைவுகூர்ந்து மறப்பவர்கள் அல்ல நாம். தமிழ்நாட்டில் தியாகிகளுக்கு மணிமண்டபம், சிலைகள் பெரும்பாலும் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டவையே. வ.உ.சி. பிறந்தநாளில் 13 அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தினோம்.

பாரதியார் நினைவுநாளில் 14 அறிவிப்பை வெளியிட்டு செயல்படுத்தியுள்ளோம். காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டது. கடலூரில் அஞ்சலையம்மாள் சிலை வைக்கப்பட்டது. காந்தி மண்டபம், அருங்காட்சியகம், காமராஜர் மண்டபத்தை மேம்படுத்த ரூ.3.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தியாகிகளின் குடும்ப ஓய்வூதியத்தை ரூ.22 ஆயிரமாக உயர்த்தி வழங்கவுள்ளோம். விடுதலை போராட்ட வீரர்களின் வழித்தோன்றல்களுக்கு உதவிகள் செய்து வருகிறோம்.

அதிகார பகிர்வில் மாநிலங்களின் பங்கு குறைந்து வருவது வருத்தம் அளிக்கிறது. மாநில அரசுகளுக்கு படிப்படியாக கூடுதல் அதிகாரங்கள் தேவைப்படுகிறது. மாநில அரசுகளின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகிறன. நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது. மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை எப்போதும் போராடில், வாதாடி பெற வேண்டியுள்ளது என கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu government ,Chief Minister ,MLA K. Stalin ,Chennai ,79th Independence Day ,Government of Tamil Nadu ,Independence Day ,George Fort ,Chennai Fort ,
× RELATED தமிழகத்தில் வாக்காளர் பட்டியல்...