×

உப்பாறு அணைக்கு தண்ணீர் கேட்டு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்

தாராபுரம், டிச.9:  உப்பாறு அணைக்கு தண்ணீர் கேட்டு விவசாயிகள் நேற்று முதல் காலவரையற்ற தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணை மூலம் 6060 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. இந்த அணைக்கு பிஏபி அணையில் இருந்து அரை டி.எம்.சி. நீரை திறந்த விட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அணையின் முழு கொள்ளளவான 18 அடிக்கு தண்ணீர் நிரம்பினால் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏழு ஊராட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் குடிநீர் வசதி பெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிஏபியின் தொகுப்பு அணைகளில் போதிய தண்ணீர் இருந்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தாராபுரம் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடுவதில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் 15 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாத உப்பாறு அணையின் பாசன பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையால் சுமார் 1.5 லட்சம் தென்னை மரங்கள் ஏற்கனவே காய்ந்து கருகி விட்ட நிலையில் தற்போது இப்பகுதியில் விவசாயம் முற்றிலும் அழிந்து கால்நடை வளர்ப்பு மட்டுமே தொழிலாக இருந்து வருகிறது.

கடந்த 1969ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட உப்பாறு அணை மூலம் 3 போக நெல் சாகுபடி எடுத்த விவசாயிகளில் பலர் தற்போது விவசாயம் பொய்த்து போனதால் பல்வேறு நகரங்களுக்கு குடி பெயர்ந்து சென்றுவிட்டனர், குடிநீருக்காக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் வறண்டு போய் பல கிராமங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. உப்பாறு அணையின் பாசனத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக திருப்பூர் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கடந்த ஓராண்டாக உப்பாறு அணைக்கு டிஏபி தண்ணீரை திறந்து விடக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன.

வருவாய் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பிஏபி தண்ணீரை விடுவிக்காமல் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், உப்பாறு அணைக்கு பிஏபி தண்ணீரை விடுவிக்கக்கோரி தாராபுரம் உப்பாறு அணை முன்பு நேற்று முதல் காலவரையற்ற தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவங்கி உள்ளனர். திருப்பூர் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் அர்ஜுனன் தலைமையில் நிர்வாக குழு உறுப்பினர்கள் சிவகுமார் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்
இதுகுறித்து தகவலறிந்த தாராபுரம் வருவாய் துறை அதிகாரிகள் போராட்டக் குழுவினரிடம் நேரில் சென்று சமாதானம் பேச முயன்றபோது அதை புறக்கணித்த விவசாயிகள், உப்பாறு அணைக்கு தண்ணீர்  விடுவித்துவிட்டு அதன்பின் பேச்சுவார்த்தை நடத்த வாருங்கள் எனக்கூறி திருப்பி அனுப்பினர்.

Tags : Upparu Dam ,
× RELATED உப்பாறு அணைக்கு முழு கொள்ளளவு தண்ணீர் வழங்கக்கோரி போராட்டம்