டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 10 இடங்களில் மறியல் போராட்டம்..

ஊட்டி, டிச. 9: புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நீலகிரியில் 10 இடங்களில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் கடந்த 12 நாட்களாக ஒட்டுமொத்த விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் உள்ள மத்திய அரசை கண்டித்து விவசாய குழுவினர் நேற்று பாரத் பந்த் நடத்தினர்.   

 நேற்று நடந்த பந்த்தையொட்டி நீலகிரி மாவட்ட தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  சார்பில் மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. எருமாடு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் மறியல் நடந்தது. அய்யன்கொல்லியில் இடை கமிட்டி செயலாளர் ராஜன் தலைமையில், இடை கமிட்டி உறுப்பினர் பிஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேவர்சோலையில் மாவட்டக் குழு உறுப்பினர் சுரேஷ் தலைமையிலும், கூடலூரில் விவசாய சங்க மாவட்ட தலைவர் வாசு தலைமையிலும், பந்தலூரில் மாவட்டக் குழு உறுப்பினர் ரமேஷ் தலைமையிலும் மறியல் போராட்டம் நடந்தது. நடுவட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் கிருஷ்ணன், ஊட்டி ஏடிசி பகுதியில் இடை கமிட்டி செயலாளர் சங்கர்லிங்கம் தலைமையிலும், குன்னூரில் செயற்குழு உறுப்பினர்  வினோத் தலைமையிலும், இடை கமிட்டி செயலாளர் இளங்கோ, கோத்தகிரியில் இடை கமிட்டி செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் பல இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: