சரவணம்பட்டி, ரத்தினபுரியில் 32 பவுன் தங்க நகைகள் கொள்ளை

கோவை, டிச.8: கோவை சின்னவேடம்பட்டி அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (42). கோவை காந்திபுரத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். கடந்த 29ம் தேதி இவர் தனது குடும்பத்தினருடன் திருச்சிக்குச் சென்றார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பீரோவில் வைத்திருந்த 25 பவுன் தங்க நகை மற்றும் 42 ஆயிரம் ரூபாய், வெள்ளி குத்து விளக்கு, வெள்ளிப் பாத்திரங்கள் , 4 வாட்ச் உட்பட பல்வேறு பொருட்களை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.

வீட்டில் யாராவது இருக்கிறார்களா? என நோட்டம் விட்டு இந்த கும்பல் திருடி சென்று இருப்பதாக தெரிகிறது. வீடு மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் 4 பேரின் கைரேகை பதிவுகளை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். இது ெதாடர்பாக விசாரணை நடக்கிறது. ரத்தினபுரி தயிர் இட்டேரி பகுதியை சேர்ந்தவர் பிரிட்டன் பில்டத் (24). ஒர்க்ஷாப் ஊழியர். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். மீண்டும் இவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கோவை நகரில் வீடுகளில் திருடர்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகின்றனர். நேரு நகர் பகுதியில் 50 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் நகரில் மேலும் இரு இடங்களில் 32 பவுன் தங்க நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருடர்களை பிடிக்க போலீசார் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>